ரூ2,800 கோடிக்கு ஒப்பந்தம்: இந்தியாவிடம் பிரம்மோஸ் வாங்குகிறது பிலிப்பைன்ஸ்

புதுடெல்லி, ஜன. 29: இந்தியாவிடம் இருந்து ரூ.2,800 கோடிக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்ஸ் வாங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இந்தியா-ரஷ்ய நாடுகளின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.   இதை இந்தியா உள்நாட்டிலேயே தயாரித்து வருகிறது. சூப்பர்சோனிக் ரகத்தை சேர்ந்த இதை, கப்பல், நீர்மூழ்கிக் கப்பல், விமானம் அல்லது நிலத்தில் இருந்து ஏவ முடியும். இந்திய - சீன எல்லை பகுதிகளான லடாக், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட முக்கியமான இடங்களில் இந்த ஏவுகணைகள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணையை வாங்குவதற்கு, அண்டை நாடான பிலிப்பைன்ஸ் ஆர்வம் காட்டியது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், பிலிப்பைன்சுக்கு ரூ.2,800 கோடிக்கு இந்த ஏவுகணையை விற்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளது. இது குறித்து இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நிலத்தில் இருந்து போர்க் கப்பல்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட   பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்சுக்கு விற்க, ஒப்பந்தமாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி கொள்கைக்கு   புதிய உத்வேகம் கிடைக்கும்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: