×

மோடி ஆட்சியில் ஏழைகளின் வருமானம் 53% சரிவு; பணக்காரர்கள் வருமானம் 33% உயர்வு!: தமிழக காங். கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சாடல்

சென்னை: மோடி ஆட்சியில் 7 ஆண்டுகளில் ஏழைகளின் வருமானம் 53 சதவீதம் குறைந்து, பணக்காரர்கள் வருமானம் 33 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். மும்பை பொருளாதார ஆய்வு மையத்தின் புள்ளி விவரத்தின்படி தகவல் தெரியவந்துள்ளது என்றும் அழகிரி குறிப்பிட்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஏழைகளின் வருமானம் குறைந்ததால் ஏற்பட்ட விளைவுகளை கிராமப்புறங்களில் காண முடிகிறது. கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஏழை, பணக்காரர்கள் வேறுபாடு அதிகமாக உள்ளது. ஏழை, பணக்காரர் வேறுபாடு என்பது அரசிடம் சரியான பொருளாதார கொள்கை இல்லத்தையே காட்டுகிறது என்று குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய கே.எஸ்.அழகிரி, முதலில் படேலை தேர்ந்தெடுத்த பிரதமர் நரேந்திர மோடி, தற்போது நேதாஜியை தேர்ந்தெடுத்துள்ளார்.

நேதாஜி, படேல் இருவருக்குமே தலைவராக இருந்தவர் அண்ணல் காந்தி. குஜராத் என்றால் மகாத்மா காந்திதான் முதன்மையானவர்; அங்கு படேலின் பிரம்மாண்ட சிலை வைப்பது காந்தியை குறைத்து காட்டவே என்று கூறினார். காவிரி தொடர்பாக பேசிய அவர், காவிரி வழக்கின் இறுதித் தீர்ப்பில் குடிநீருக்கு 11 டி.எம்.சி. ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி குடிநீர் பிரச்சனையில் தமிழ்நாடு பக்கம் காங்கிரஸ் நிற்கும் என்று உறுதி அளித்தார். மேலும் தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க இலங்கை அரசுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட கே.எஸ்.அழகிரி, இந்திய ஆட்சி பணி அதிகாரிகளுக்கான விதிகளை மாற்றுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என எச்சரித்தார்.

ஆட்சிப்பணி திருத்த விதிகளுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டுக்கு காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் என்றும் கூறினார். நூல் விலை உயர்வால் லட்சக்கணக்கான விசைத்தறி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் தான் நூல் மற்றும் பஞ்சு விலை அதிகரித்துள்ளது. நூல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் நாடு முழுவதும் விசைத்தறியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கே.எஸ்.அழகிரி காட்டமாக கூடினார்.

Tags : Modi ,Tamil Kong. Committee ,K. S. Salagiri Sadal , Modi regime, poor income, decline, KS Alagiri
× RELATED என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்: பிரதமர் மோடி