×

நீண்டநாள் கோரிக்கையை ஏற்று நெய்தலூர் ஊராட்சியில் அரசு நேரடி கொள்முதல் நிலையம் அமைப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

தோகைமலை : தோகைமலை அருகே நெய்தலூர் ஊராட்சியில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர், முதலைபட்டி, சேப்ளாப்பட்டி ஆகிய 3 ஊராட்சிகள் ஆற்று பாசனமாக இருந்து வருகிறது. மேலும் தோகைமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊராட்சி கிராமங்கள் குளம் மற்றும் கிணற்று பாசன பகுதியாகவும் இருந்து வருகிறது. இந்த பகுதிகளில் விவசாயிகள் நெல் சாகுபடியை அதிகமாக விரும்பி சாகுபடி செய்து வருகின்றனர்.

இதனால் தோகைமலை பகுதிகளில் தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து, இடை தரகர்கள் இல்லாமல் அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கே விவசாயிகளிடம் இருந்து நெல்லை பெறவேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் முயற்சியால் தோகைமலை ஒன்றியத்தில் நெய்தலூர் மற்றும் கல்லடை ஊராட்சியில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக நெய்தலூர் ஊராட்சி சின்னப்பனையூர் சமுதாயக்கூடம் அருகே தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கொள்முதல் நிலையத்தில் இரண்டு ரகங்களாக நெல்லை கொள்முதல் செய்கின்றனர். இதில் அரசு நிர்ணய விலையாக சண்ண ரகம் (கிரேடு ஏ) ஒரு கிலோ ரூ.20. 60க்கும், மோட்டா (பெரியது கிரேடு சி) ரகம் ஒரு கிலோ ரூ.20.15க்கும் பெறப்படுகிறது. நெல்லின் ஈரப்பதம் 15 முதல் 17 (மாக்ஷர்) அளவு இருக்க வேண்டும். மேலும் நெல்லில் இருந்து கரிமம் மற்றும் கணிமம் தரம்பார்த்து எடுக்கப்படுகிறது.

ஒரு மூட்டைக்கு சாக்குடன் 40.580 கிலோவிற்கு மிகாமல் எடுக்கப்பட்டு அதில் நீலம் நிரம் கொண்ட சணலால் 14 சுத்து தையல் அமைக்கப்படுகிறது.இங்கு விவசாயிகள் தங்களது நெல்லை கொள்முதல் செய்வதற்கு இணைவழியில் முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு வரிசைப்படி கொள்முதல் செய்யப்படுகிறது. இணைய வழியில் முன்பதிவு செய்வதற்கு விஏஓ சான்று பெற்ற அடங்கல், விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை, நிலத்தின் சிட்டா ஆகியவற்றை கொண்டு இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையத்தில் அரசு வழங்கும் சாக்கில் நெல்லை பிடிப்பதால் சாக்குடன் நெல்லை கொண்டு வர தேவையில்லை. குவியலாக கொண்டு வந்தால் போதும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு 3 நாட்களில் தங்களது வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளனர். தற்போது விவசாயிகள் தொடர்ந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

இந்த கொள்முதல் நிலையமானது அறுவடை பருவ காலம் முடியும் வரை செயல்படும் என்றும், கொள்முதல் செய்யப்படும் நெல் அய்யர்மலையில் உள்ள தமிழக அரசின் தானியக்கிடங்கில் சேமிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த பகுதியில் தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Tags : Government Direct Purchase Station Organization ,Neydalur Prourates , Tokaimalai: The Government of Tamil Nadu has accepted the long standing demand of farmers in the Neythalur panchayat near Tokaimalai for direct paddy.
× RELATED மக்களவை தேர்தல் முடிவுகள்: தென்காசி...