×

அவிநாசி அருகே பரபரப்பு: சிறுத்தை தாக்கி 4 பேர் படுகாயம்

அனுப்பர்பாளையம்: அவிநாசி அருகே சிறுத்தை தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி அடுத்த பாப்பன்குளம் ஊராட்சி பகுதியை சேர்ந்தவர்கள் மாறன் (60) மற்றும் வரதராஜ் (62) விவசாய தொழிலாளிகள். இவர்கள் 2 பேரும் இன்று காலை விவசாய பணிக்காக சென்று கொண்டிருந்தனர். அப்போது, பாப்பன்குளம் டவர் ஹவுஸ் அருகே சென்றபோது, புதர் பகுதியில் மறைந்திருந்த சிறுத்தை திடீரென இருவரையும் தாக்கியது. இதில், 2 பேரும் படுகாயமடைந்தனர்.

அவர்களை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் டவர் ஹவுஸ் பகுதிக்கு திரண்டு சென்றபோது, மோகன் (58), முன்னாள் சேவூர் திமுக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் (55) ஆகிய 2 பேரையும் அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை திடீரென பாய்ந்து தாக்கியது. அவர்களை பொதுமக்கள் மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 2 பேரையும் சேர்த்து 4 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி வனச்சரக அலுவலர்கள் பொம்மன், திருமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவயிடத்துக்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் இருந்து நீர்வழி பாதையில் புளியம்பட்டி வழியாக இப்பகுதிக்கு சிறுத்தை வந்திருக்கலாம் என்று தெரிவித்தனர்.

தற்போது அவிநாசி தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிறுத்தை தாக்கி 4 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

Tags : Avinashi , Riots near Avinashi: 4 injured in leopard attack
× RELATED கழிவுகளை கொட்ட வந்த லாரி சிறைபிடிப்பு