ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்

விழுப்புரம் : விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியிருந்தனர். தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர்.தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. நாளுக்கு நாள் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் தினசரி எண்ணிக்கை 500ஐ தொட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 50 ஆயிரத்தை கடந்துள்ளது. இதனால் கொரோனா பரவல் விதிமுறைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி இந்த மாதம் 3வது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது. முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதுமின்றி வெறிச்சோடி கிடந்தது. எஸ்.பி. நாதா தலைமையில் 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் மாவட்டத்தின் எல்லைகளாக உள்ள 12 இடங்களிலும், நகர பகுதிக்கு வரும் சாலைகள் என முக்கிய சாலைகளிலும் தடுப்புகளை அமைத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், விழுப்புரத்தில் புதுச்சேரி செல்லும் சாலைகள் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் ஊர் சுற்றிய சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சிலரது வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். முழு ஊரடங்கு காரணமாக நகரப்பகுதி வெறிச்சோடி காணப்பட்ட நிலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி:  

கொரோனா 3வது அலை மற்றும் ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் 3வது வாரம் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் மூடப்பட்டன. கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் பேருந்துகள் எதுவும் இயக்கப்படாததால் பயணிகள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் மக்கள் உள்ளே செல்லாதவாறு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டிருந்தது.

சேலம் மெயின்ரோடு, துருகம் சாலை, சங்கராபுரம் சாலை, கச்சிராயபாளையம் சாலை ஆகிய பகுதிகளில் கடைகள் முழுமையாக மூடப்பட்டு இருந்தன. வாடகைக்கு இயக்கக்கூடிய ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் இயக்கப்படாமல் ஆங்காங்கே பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்டவைகளும் மூடப்பட்டிருந்தன. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், மருந்தகம் மற்றும் வங்கி ஏடிஎம் ஆகியவை திறக்கப்பட்டிருந்தது.

கள்ளக்குறிச்சி போலீசார் சேலம் மெயின்ரோடு பகுதியில் இரும்பு தடுப்புக்கட்டை அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முகக்கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் விதித்து வசூலித்தனர். அதுபோன்று தேவையின்றி சாலையில் சென்ற வாகன ஓட்டிகளை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் கள்ளக்குறிச்சி பகுதி முழுவதும் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர்.

புதுவை எல்லைகளுக்கு படையெடுத்த குடிமகன்கள்

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்ததால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இறைச்சி கடைகளும் முழுமையாக மூடப்பட்டன. இதனிடையே விழுப்புரம் மாவட்ட எல்லையோர கிராமங்களில் உள்ள குடிமகன்கள், அருகில் உள்ள புதுச்சேரி பகுதிக்கு படையெடுத்தனர்.

விழுப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இருந்து சிறுவந்தாடு, மடுகரைக்கும், விக்கிரவாண்டியை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ளவர்கள் ராதாபுரம், திருக்கனூருக்கும், கெங்கராம்பாளையம் வழியாக மதகடிப்பட்டு உள்ளிட்ட புதுச்சேரி பகுதிகளுக்கும் படையெடுத்தனர். இறைச்சி வாங்குவதற்காகவும் புதுச்சேரியில் எல்லைகளுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து ஏராளமானோர் படையெடுத்தனர். எல்லை பகுதிகளில் போதிய போலீசார் இல்லாததால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

முகூர்த்த நாள் என்பதால் வாகன போக்குவரத்து அதிகம்

ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில், முகூர்த்த நாள் என்பதால் வாகன போக்குவரத்து நேற்று சற்று அதிகரித்து காணப்பட்டது. திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. குறிப்பிட்ட நபர்களுக்கு முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கிய நிலையில், நேற்றைய தினம் விழுப்புரம் மாவட்டத்தில் கோயில்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தன.

இதற்காக கார், வேன்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டன. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சாலையில் செல்பவர்களை வாகன தணிக்கை செய்து அவர்கள் உண்மையிலேயே திருமண நிகழ்ச்சிக்கு செல்கிறார்களா என்று சோதனை செய்த பிறகே அவர்களை அனுமதித்தனர்.

Related Stories: