தென்காசி அருகே பயங்கரம் டிரைவர் அடித்துக்கொலை-நண்பரை பிடித்து விசாரணை

தென்காசி : தென்காசி அருகே இலஞ்சியில் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த டிரைவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தென்காசியை அடுத்த கீழே இலஞ்சி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அடிவெட்டி மகன் சின்ன இசக்கி (36). டிரைவரான இவர் அதே பகுதியில் புது வீடு கட்டி வந்தார். நேற்று முன்தினம் இரவில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் வீட்டின் முன்பு சின்ன இசக்கி படுத்து உறங்கி உள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை வீட்டின் முன்பு காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளதை அப்பகுதியில் உள்ளவர்கள் பார்த்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி டிஎஸ்பி மணிமாறன், குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் ஜோஸ் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் சின்ன இசக்கியும், அவரது உறவினரும் நண்பருமான அதே பகுதியை சேர்ந்த செல்லப்பா மகன் செல்வம் (30) என்பவரும் நள்ளிரவில் மது அருந்தியுள்ளனர். அப்போது குடிபோதையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த செல்வம் உருட்டுக்கட்டையால் சின்னஇசக்கியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் முகம் சிதைந்த நிலையில் சின்னஇசக்கி ரத்தகாயங்களுடன் துடிதுடித்து இறந்தது தெரியவந்தது.இதையடுத்து தலைமறைவான செல்வத்தை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையுண்ட சின்ன இசக்கிக்கு நந்தினி என்ற மனைவியும் 15 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகள் ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தென்காசி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: