×

போட்டியிட சீட் தர மறுப்பு பாரிக்கர் மகன் போர்க்கொடி: கோவா மாநில பாஜ.வில் சலசலப்பு ‘மீன் பிடிக்க’ கெஜ்ரிவால் வலைவீச்சு

புதுடெல்லி: உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் 10ம் முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடத்தப்படுகிறது. உபி.யில் 7 கட்டங்களாகவும், பஞ்சாப்பில் பிப்ரவரி 20ம் தேதி ஒரே கட்டமாகவும், உத்தரகாண்ட், கோவா மாநிலங்களில் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சிகள் வெளியிட்டு வருகின்றன. கோவாவில் முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்த சட்டப்பேரவை மொத்தம் 40 உறுப்பினர்களை கொண்டது. மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பாஜ முயற்சி செய்யும் நிலையில், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் காண்பதால், பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்மாநிலத்துக்கான 34 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜ நேற்று வெளியிட்டது. அதில் இடம் பெற்றுள்ள 16 பேர் சில மாதங்களுக்கு முன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து பாஜ.வுக்கு தாவியர்கள்.
முதல்வர் பிரமோத் சாவந்த் சன்குலிம் தொகுதியிலும், துணை முதல்வர்  மனோகர் அஜ்காவ்கர் மர்மகோவா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.  தற்போது அமைச்சர்களாக இருக்கும்  தீபக் பவுஸ்கர், பிலிப் நெரி ரோட்ரிக்ஸ், எம்எல்ஏ.வான இசிடோர் பெர்னாண்டஸ் ஆகியோருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த மாநிலத்தில் பாஜ.வின் முதல்வராக 3 முறை இருந்தவர் மனோகர் பாரிக்கர். ஒன்றிய அமைச்சராகவும் இருந்துள்ளார். பாஜ.வின் அசைக்க  முடியாத தூண்களில் ஒருவரான இவருடைய மகன் உத்பால் பாரிக்கர். இவர் தனது போட்டியிட்டு வந்த பனாஜி தொகுதியை தனக்கு தரும்படி கட்சி மேலிடத்திடம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இவருடைய பெயரே இடம் பெறவில்லை. இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்பால் கேட்ட பனாஜி தொகுதி, அட்னாசியோ மான்செராட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மனோகர் பாரிக்கரின் மறைவுக்குப் பிறகு 2019ல் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இவர் வெற்றி பெற்றார். பின்னர், பாஜ.வுக்கு தாவி விட்டார்.

அதனால், இந்த தொகுதி மீண்டும் அவருக்கே அளிக்கப்பட்டுள்ளது. உத்பாலுக்கு இது மேலும் அதிருப்தி அளித்துள்ளது. தனது அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி விரைவில் அறிவிப்பதாக உத்பால் அறிவித்துள்ளார். பாஜ.வில் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை பயன்படுத்தி ‘மீன் பிடிக்கும்’ முயற்சியில் ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த கெஜ்ரிவால் இறங்கியுள்ளார். உத்பாலுக்கு பனாஜி தொகுதியில் தனது கட்சி சார்பில் வாய்ப்பு அளிப்பதாக நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவின் மூலம் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், சிவசேனா போன்ற கட்சிகளும் அழைப்பு விடுத்துள்ளன. கோவாவின் பாஜ தேர்தல் பொறுப்பாளரான தேவேந்திர பட்னவிஸ் கூறுகையில், ‘‘குடும்பத்தின் பெயரால் பாஜ.வில் யாரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்க முடியாது. கட்சிக்கு ஆற்றிய கடின உழைப்பால் மட்டுமே அது கிடைக்கும். உத்பாலுக்கு 2 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அதை அவர் நிராகரித்து விட்டார்,’’ என்றார்.

* இது குடும்ப அரசியல் இல்லையா?
குடும்ப அரசியலை காரணம் காட்டி உத்பாலுக்கு சீட் தர மறுத்துள்ள பாஜ, மேலிடம், நேற்று வெளியிட்ட பட்டியலில், 2 வேட்பாளர்களின் மனைவிகளுக்கும் சீட் வழங்கியுள்ளது. பனாஜி வேட்பாளர் அட்னாசியோ மான்செராட்டின் மனைவியும், கோவா ஐடி துறை அமைச்சருமான ஜெனிபருக்கும், சுகாதார துறை அமைச்சர் விஷ்வஜித் ரானேவுக்கும், அவரது மனைவி திவ்யா ரானேவுக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. இதை சுட்டிக்காட்டி உள்ள எதிர்க்கட்சிகள், இது குடும்ப அரசியல் இல்லையா? என கேள்வி எழுப்பியுள்ளன.

* இன்னும் வாய்ப்பு உள்ளது
கோவாவில் 34 தொகுதிகளுக்கான பட்டியலை மட்டுமே பாஜ வெளியிட்டுள்ளது. இன்னும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எனவே, உத்பாலை சமாதானப்படுத்தி இந்த 6 தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் நிறுத்த பாஜ மேலிடம் முயற்சிக்கும் என கருதப்படுகிறது.

* தேர்தலில் முதல்முறையாக அகிலேஷ் யாதவ் போட்டி
உபி.யில் கடந்த  2007க்கு பிறகு முதல்வராக பதவி வகித்த பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், தற்போது முதல்வராக உள்ள பாஜ.வின் யோகி ஆதித்யநாத் உட்பட யாருமே தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு பதவிக்கு வரவில்லை. சட்டமேலவை உறுப்பினராக இருந்தே முதல்வராக பதவி வகித்தனர். இந்நிலையில், இந்த தேர்தலில் முதல் முறையாக கோரக்பூர் தொகுதியில் யோகி போட்டியிடுவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மெயின்பூரி மாவட்டத்தில் உள்ள கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டியிடுவதாக சமாஜ்வாடி கட்சி நேற்றிரவு அறிவித்தது.

Tags : Parrikar , Parrikar's son refuses to contest seats: Kejriwal's gossip
× RELATED பாஜவில் இருந்து விலகிய மாஜி முதல்வர்...