வருசநாடு: மயிலாடும்பாறை அருகே வல்வால்கள் தொல்லையால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். தேனி மாவட்டம் மயிலாடும்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தென்னை மற்றும் இலவம் விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வவ்வால்கள் கூட்டம் மயிலாடும்பாறை பகுதிக்கு படையெடுத்தது. பகல் நேரங்களில் ஓட்டணை அருகே மூலவைகை ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ள மருத மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் வவ்வால்கள் இரவு நேரங்களில் இலவம், தென்னை மரங்களில் உள்ள பூ, பிஞ்சுகளை சேதப்படுத்தி வருகின்றன.
இதனால் விவசாயிகள் இரவு நேரங்களில் தோட்டங்களில் வெடிகள் வெடித்தும், புகைமூட்டம் எழுப்பியும் வவ்வால்களை விரட்டி வருகின்றனர். இருப்பினும் வவ்வால்கள் தொல்லையை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே வனத்துறையினர் வவ்வால்களை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.