×

கோவிட் காரணமாக வீட்டு தனிமையில் உள்ளவர்களுக்கு உதவ சென்னையில் 1,535 களப்பணியாளர்கள் நியமனம் : சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை : கோவிட் காரணமாக, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான உதவிகளை செய்திடும் வகையில் 15 மண்டலங்களில் 1,535 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் கோவிட் தொற்று பரவல் மற்றும் மரபியல் மாற்றமடைந்த ஒமிக்ரான் தொற்று பரவல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முதல்வர் உத்தரவின்படி சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக 1000 கோவிட் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 200 வார்டுக்கு 1000 பணியாளர்கள் களப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து அத்தியாவசிய பொருள்கள், மருந்துகள் மற்றும் உணவுகள் உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் நேரடியாக அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வரும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடிக்கிறார்களா என தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

சென்னையில் தற்பொழுது கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மற்றும் அடையாறு ஆகிய மண்டலங்களில் கோவிட் தொற்று பாதிப்பு அதிகம் காணப்படுகிறது. எனவே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின்படி தொற்று பாதிப்பு அதிகமுள்ள  7 மண்டலங்களில் தொற்று பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்காக கூடுதலாக வார்டிற்கு 5 களப்பணியாளர்கள் வீதம் 535 களப்பணியாளர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே உள்ள 1000 கோவிட் களப்பணியாளர்களுடன் கூடுதலாக 535 களப்பணியாளர்களும் சேர்த்து தற்பொழுது 1535 களப்பணியாளர்கள் கோவிட் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chennai Corporation ,Govt , Chennai Corporation, Feild Workers, Covid 19
× RELATED திருவான்மியூர் கடற்கரையில் வானில்...