×

பஞ்சாப் வேட்பாளர் காங். பட்டியலில் 86 பேர்

புதுடெல்லி : பஞ்சாப் சட்டபேரவைக்கு போட்டியிடும்  முதல் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது.  அதில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி,மாநில காங். தலைவர் நவ்ஜோத் சிங் சித்து உள்ளிட்ட 86 பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. பஞ்சாப், உபி, உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டபேரவைகளுக்கு அடுத்த மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 7ம் தேதி வரை தேர்தல் நடக்கிறது. பஞ்சாபில் பிப். 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. பஞ்சாப்பில் காங்கிரஸ்  ஆளும் கட்சியாக உள்ளது.

 இம்மாநில தேர்தல் தொடர்பாக டெல்லியில் காங்கிரசின் மத்திய தேர்தல் கமிட்டி கூட்டம் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பஞ்சாப் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை  தேர்வு செய்வது குறித்து ஆலோசித்தனர். பின்னர்,  இம்மாநிலத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் 86 பெயர்கள் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

அதில், முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாப் காங். தலைவர் சித்து, துணை முதல்வர்கள் சுக்ஜிந்தர் சிங், ஓம் பிரகாஷ் சோனி போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சம்கவுர் சாகிப் தொகுதியிலும், அமிர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்துவும், சுக்ஜிந்தர் சிங் டேரா பாபா நானக் தொகுதியிலும், ஓம் பிரகாஷ் சோனி அமிர்தசரஸ் மத்திய தொகுதியிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.


Tags : Punjab ,Kong , Punjab Elections, Elections 2022,Congress Candidate List
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து