×

உ.பி. உள்பட 5 மாநில தேர்தல் பணி தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி

*100க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

சென்னை : உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிக்காக தமிழகத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் செல்ல உள்ளனர். அவர்களுக்கு நேற்று முன்தினம் சென்னையில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கடந்த வாரம் அறிவித்தார். அதன்படி, பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 14ம் தேதி (நேற்று முன்தினம்) தொடங்கியது.

இந்நிலையில், தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கும் தேர்தல் செலவின பார்வையாளர்கள், பொது பார்வையாளர்களாக, போலீஸ் பார்வையாளர்களாக தமிழகத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி) அதிகாரிகள் செல்ல உள்ளனர்.

இதையொட்டி சென்னை, கலைவாணர் அரங்கில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி முன்னிலையில் உத்தரபிரதேசம், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தேர்தல் பார்வையாளர்களாக பங்கேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த இந்திய ஆட்சி பணி அலுவலர்கள் (ஐஏஎஸ்), இந்திய காவல் பணி அலுவலர்கள் (ஐபிஎஸ்) மற்றும் இந்திய வருவாய் பணி அலுவலர்கள் (ஐஆர்எஸ்) ஆகிய அதிகாரிகளுக்கான பயிற்சி கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் இருந்து கானொலி வாயிலாக நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 100 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பயிற்சி முடிந்துள்ளதை தொடர்ந்து விரைவில் தமிழக உயர் அதிகாரிகள் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தல் பணிக்காக செல்ல உள்ளனர். இவர்கள் தேர்தல் முடியும் வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாநிலங்களில் தேர்தல் பணிகளை பார்வையிடுவார்கள். இதில், ஐஏஎஸ் அதிகாரிகள் பொது பார்வையாளர்களாகவும், ஐபிஎஸ் அதிகாரிகள் தேர்தல் நடைபெறும் இடங்களில் போலீஸ் பார்வையாளர்களாகவும், ஐஆர்எஸ் அதிகாரிகள் வேட்பாளர்களின் தேர்தல் செலவுகளை கண்காணிப்பது மற்றும் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மீறி செலவு செய்கிறார்களா, வாக்காளர்களுக்கு பணம் வழங்குகிறார்களா என்பது உள்ளிட்ட முக்கிய பணிகளில் ஈடுபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இருந்து தேர்தல் நடைபெறும் மாநிலங்களுக்கு செல்லும் தமிழக ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகள் அனைவரும் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டில் செயல்படுவார்கள். இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே தலைமை தேர்தல் ஆணையம் முக்கிய முடிவுகளை அறிவிக்கும்.

Tags : Tamil Nadu ,IAS , 5 State Election,Tamilnadu IPS,IAS training,Elections2022
× RELATED 3ம் ஆண்டை நிறைவு செய்த தமிழக அரசுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து