8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை; அண்ணாமலை பல்கலை. பயிற்சி மருத்துவர்கள் தர்ணா போராட்டம்

கூடலூர்: கடந்த 8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டி சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியின் இளநிலை பயிற்சி மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கடலூர் அரசு  மருத்துவக்கல்லூரியாக இயங்கிவரும் இராஜாமுத்தையா மருத்துவக்கல்லூரியில் பணியாற்றும் தங்களுக்கு 8 மாதங்களாக ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை என்பது இவர்களின் புகாராகும். தாங்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று பயிற்சி மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று பயிற்சி மருத்துவர்கள் 75 பேர் கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகையை போல் தங்களுக்கும் வழங்கவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாகும். மற்ற அரசு மருத்துவக்கல்லூரிகளில் மாதாந்திர உதவித்தொகையாக ஒவ்வொரு பயிற்சி மருத்துவருக்கும் சுமார் ரூ.25,000 வரை வழங்கப்படுவதாக கூறும் பயிற்சி மருத்துவர்கள் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் ரூ.1 கூட வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினர். கொரோனா தடுப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள தங்களில் 45 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தங்கள் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Related Stories: