×

பொங்கல் திருநாள் கொண்டாட்டம் கவர்னர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கவர்னர் மற்றும் அரசியல் கட்சி  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.ஆர்.என்.ரவி (தமிழக கவர்னர்):  இந்த மகிழ்ச்சியான பொங்கல் மற்றும் மகர சங்ராந்தி திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் உளம்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தை மாத முதல் நாளில் நமக்கு ஆசீர்வாதம் தருமாறு கடவுளிடம் நாம் பிரார்த்தனை செய்வோம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர்வரையும், கட்ச் முதல் கம்ருப் வரையிலும் நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் ஒற்றுமையுடன் இந்த விழாவை கொண்டாடி வருகிறார்கள். அனைவரும் அவரவரது கலாச்சாரம் மற்றும் இறை நம்பிக்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்.

இந்த நல்ல நாளில் அனைவரும் உடல் நலம் மற்றும் மகிழ்ச்சியுடனும், வளமுடனும் வாழ வாழ்த்துகிறேன். தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் திருநாளை கொரோனா விதிகளைக் கடைபிடித்து கொண்டாடுமாறு கேட்டுக்கொள்கிறேன். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா, புதுச்சேரி கவர்னர்): தைப்பொங்கல் திருநாளில் அனைவரது வாழ்விலும் எல்லா வளங்களும் பெருகி சீரோடும் சிறப்போடும் வாழ வாழ்த்துகிறேன். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): தை முதல் தேதி தமிழாண்டின் முதல் நாளானதால் அதுவே தமிழர்களின் தமிழ்ப் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இடையில் அந்த நடைமுறைக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தை முதல் நாளான பொங்கல் திருநாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொங்கல் விழாவுடன் திருவள்ளுவர் நாளையும் இணைத்து கொண்டாடுவது தமிழர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.

அண்ணாமலை (தமிழக பாஜ தலைவர்): உழைப்பின் உன்னதத்தை சொல்லும் இயற்கையின் மேன்மையை எடுத்துச் சொல்லும், நன்னாள் தைத்திங்கள் பிறக்கும் பொங்கல் திருநாள். சாதி, மத வேறுபாடுகளை மறந்து, இயற்கையை போற்றும் தமிழ்ச் சமுதாயத்தின் பெருநாளாக நாம் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும். வைகோ (மதிமுக பொது செயலாளர்): 2022ல் எட்டிப் பார்க்கும் ஒமிக்ரானை விரட்டுவோம்; இனப்பகை வெல்வோம் எனச் சூளுரைப்போம். தைப்பொங்கல் மகிழ்ச்சியைத் தரட்டும்; தன்னம்பிக்கையுடன் பணிகளை தொடர்வோம். ராமதாஸ் (பாமக நிறுவனர்): அனைவரின் துயரங்களும் தீர வேண்டும்; நாட்டில் நலம், வளம், அமைதி, மகிழ்ச்சி, சகோதரத்துவம்  செழிக்க வேண்டும். ஒட்டு மொத்தமாக, தமிழர்களின் வாழ்க்கையில் தைப்பொங்கல் திருநாளும், தமிழ்ப்புத்தாண்டும் அனைத்து நன்மைகளையும் வழங்கட்டும் என்று கூறி உலகத்தமிழர்கள் அனைவருக்கும் மீண்டும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கால  வளர்ச்சியில் விஞ்ஞானம் வியக்கத்தக்க வளர்ச்சி பெற்றிருக்கும் இந்த  காலத்திலும் வழிவழியான கலாச்சார திருவிழாவாக தைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஜி.கே.வாசன் (தமாகா  தலைவர்): தைப்  பிறந்தால் வழி பிறக்கும் என்ற நம்பிக்கையோடு வீட்டிலேயே, பாதுகாப்போடு,  மகிழ்ச்சியோடு பொங்கல் பண்டியை கொண்டாடுவோம். அவசியம் இல்லாமல் வெளியில்  செல்வதை தவிற்போம். நோயில்லா உலகம் அமைய அனைவரும் ஒன்றுபடுவோம்.  வென்றுகாட்டுவோம். அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்களை  தெரிவித்துக்கொள்கிறேன்.

திருமாவளவன் (விசிக தலைவர்): தமிழ்ப் பாரம்பரிய கலாச்சாரத்தை கட்டிக் காப்பாற்றுவது நமது கடமைகளுள் ஒன்றாகும். தமிழினம் கொண்டாடும் பண்டிகைகளிலேயே பொங்கல் பெருவிழா மட்டும் தான், பிற வகையிலான கலாச்சார கலப்போ, ஆதிக்கமோ இல்லாத தனித்துவம் வாய்ந்த ஒன்றாகும். கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்): நலிவுகள் மலிந்தாலும், பொலிவுகள் மீண்டும் பெருகும் என்ற நன்னம்பிக்கை பொங்கும் பொங்கலாக தமிழ்ப் புத்தாண்டு தைப் பொங்கல் மலரட்டும், மலரட்டும், அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். அன்புமணி (பாமக இளைஞர் அணி தலைவர்): தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகுக்கும் அன்பு, அமைதி, நிம்மதி, மகிழ்ச்சி, நல்லிணக்கம், ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து நலங்களையும், வளங்களையும் தைத்திங்களும், தமிழ்ப்புத்தாண்டும் வழங்க வேண்டும். பொங்கல் திருநாளில் பொங்கல் பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்குவதைப் போன்று, நமது வாழ்க்கையிலும் மகிழ்ச்சி பொங்க வேண்டும்.

எம்.எச்.ஜவாஹிருல்லா (மமக  தலைவர்): தமிழ், தமிழர்களின் உரிமைகளைக் காத்து நிற்கவும், விவசாயம்,  விவசாயிகளை பாதுகாக்கவும் தொடர்ந்து பாடுபட தமிழர் திருநாளாம் பொங்கல்  திருநாளில் உறுதி ஏற்போம்.  இந்த இனிய தைப்பொங்கல் திருநாளில் விவசாயம்  செழிக்கட்டும், விவசாயிகள் மகிழட்டும். மக்கள் அனைவரின் வாழ்விலும் அன்பும்  அமைதியும் நிலவட்டும். நாட்டில் நலமும், வளமும் பெருகட்டும் என்று  பிரார்த்திக்கிறேன். இதேபோல முஸ்லிம் லீக் தலைவர் வி.எஸ்.முஸ்தபா, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், அகில இந்திய எஸ்சி, எஸ்டி ரயில்வே தொழிற்சங்க தென் மண்டல பொது செயலாளர் ரயில்வே ஞானசேகரன், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் (குலாளர்) சங்க மாநில தலைவர் சேம.நாராயணன், கோகுல மக்கள் கட்சி தலைவர் எம்.வி.சேகர் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


Tags : Pongal Thirunal ,Governor , Pongal Thirunal, Governor, Political Party Leaders, Greetings
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...