வல்லம்: பொங்கல் பண்டிகைக்காக அகப்பை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இதை கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை கிராமப்புறங்களில் களைக்கட்டும் புத்தம் புது பானையும், கரும்பும், வெல்லம், புத்தரிசி என்று திருவிழா போன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும். இத்தனைக்கும் விஷயங்களிலும் நம் பாரம்பரியம் அடங்கி உள்ளது. பொங்கலுக்கு பானை எந்தளவு முக்கியமோ அதே போன்று முக்கியத்துவம் வாய்ந்ததுதான் அகப்பை. இது தமிழர்களின் பாரம்பரியம் என்பதுதான் மிக முக்கியத்துவம் வாய்ந்தது இந்த “அகப்பை” தமிழர் திருநாளான பொங்கல் திருவிழாவின் போது தான் வெளிப்படும். தமிழர்களின் பாரம்பரியத்தை வெளிநாட்டினரும் விரும்புகின்றனர்.
பானை, மண் அடுப்புடன் அடுத்த பாரம்பரியம் “அகப்பை”. எவர்சில்வர் பொருட்கள் எத்தனை வந்தாலும் கிராம மக்களுக்கு பொங்கலின் போது நினைவுக்கு வருவதும் அகப்பைதான். பொங்கல் திருவிழாவின் போது புதிதாக அறுவடை செய்யப்பட்ட புதுநெல்லினை கொண்டு பச்சரிசியாக்கி அதனை மண்பானையில் பொங்கலிட்டு இறைவனுக்கு படைக்கும் நன்னாளின் போது மண்பானையில் உள்ள அரிசியை கிளறுதற்கு அகப்பையை முன்னோர்கள் பயன்படுத்தி வந்தனர். இந்த “அகப்பை” தேங்காய் கொட்டாங்குச்சியினை சுத்தம் செய்து, அதில் மூங்கிலை சீவி இரண்டடி நீளத்தில் கைப்பிடியாக்கி பயன்படுத்தி வந்தனர். அகப்பையை பயன்படுத்தும் போது, அதன் மணமும், பொங்கல் சுவையும் மேலும் சுண்டி இழுக்கும்.
காலப்போக்கில் நாகரீகத்தின் வெளிப்பாடாக சில்வர், பித்தளை கரண்டிகளின் வரவால் அகப்பை காணாமல் போனாது. ஆனால் தஞ்சாவூர் அருகே வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் மட்டும் பொங்கல் தினத்தன்று அகப்பையை மட்டும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது இன்றும் நடைமுறையில் உள்ள ஒன்றாகும். இதற்காக இந்த ஊரில் உள்ள தச்சுத்தொழிலாளர்கள் அகப்பையை தயாரித்து பொங்கல் தினத்தன்று அதிகாலையில் ஊர்மக்களிடம் வீட்டுக்கு வீடு சென்று வழங்குவார்கள். இந்த அகப்பைக்கு அவர்கள் பணம் பெற்றுக்கொள்வதில்லை. அதற்கு மாறாக ஒருபடி நெல்லும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் மட்டுமே பெற்றுக்கொள்கின்றனர். இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது. இனியும் தொடரும் என்கிறார் அகப்பை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள கணபதி.