சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் வரும் 12ம் தேதி அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உ ருவாக வாய்ப்புள்ளது என தெரிவித்திருந்த நிலையில் தற்போது தாமதமாக உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வரை அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாககூடும். இருதினங்களில் மேற்கு திசையில், தமிழக- இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.
இதன்காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும். அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர் உள்ளிட்ட கடலோர மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 13, 14, 15 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் வரும் 12ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடைகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஆரம்பிக்கும் முதல்கட்ட மழை தொடர்ந்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் தீவிரமடையும். 12ம் தேதி பலத்த மழை பெய்ய வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
The post வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் நிலையில் வரும் 12ம் தேதி அதிக மழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.