×

தருவைகுளம் கடல் பகுதியில் தொடர்ந்து மீன்பாடு மந்தம்

குளத்தூர்: தருவைகுளம் கடல் பகுதியில் தொடர்ந்து மீன்பாடு மந்தமான நிலையில் திருக்கை மீன் வரத்து அதிகரித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர்  அருகே தருவைகுளம் கடல்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே மீன்பாடு மந்தமாகவே இருந்து வருகிறது. பெரும்பாலான தங்குகடல் விசைப்படகுள்,  மீன்கள் கிடைக்காத நிலையால் மேலும் ஒரு சில நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில படகுகளில் முறல், விலமீன்குட்டி, சூறை, கேறை, ஒட்டி,  திருக்கை, குரங்கு சுறா போன்ற மீன்கள் வரத்து காணப்பட்டது.

இவற்றில் திருக்கை  மீன் வரத்து ஓரளவு அதிகரித்துள்ளது. மற்ற மீன்கள் வரத்து குறைவால்  சில்லரை வியாபாரிகளும் ஏலம் எடுக்க அதிக அளவில் வரவில்லை. இதில் முறல்வகை மீன்கள்  கிலோ ரூ.180 முதல் ரூ.250 வரை ஏலம் போனது. சூரை ரூ.70க்கும், கேறை  ரூ.120க்கும், விலமீன் குட்டி ரூ.220க்கும் ஏலம் போனது. அதிகவரத்து  காணப்பட்ட திருக்கை மீன் ரூ.100க்கு மட்டுமே ஏலம்போனது. இதுகுறித்து வியாபாரி ராஜேந்திரன் என்பவர் கூறுகையில் ‘‘தருவைகுளம் கடல் பகுதியில் கடந்த  வாரங்களை விட இந்த வாரம் மீன்பாடுகள் படு மந்தமாகவே உள்ளது.

2 மற்றும் 3 நாட்கள் தங்குகடலுக்கு சென்ற மீனவர்கள் படகுகளில் ஒரு சில மீனவர்களின்  படகுகளே குறைந்த அளவிலான மீன்களுடன் கரை திரும்பி வருகின்றன. அதிலும்  திருக்கை மீனை தவிர மற்றவை குறைச்சலான வரத்தே உள்ளது. இதனால் சுற்று வட்டார  கிராமத்தை சேர்ந்த சில்லரை மீன் வியாபாரிகளுக்கு தேவையான மீன்கள்  கிடைக்காமல் வெறும் கையுடனே திரும்புகின்றனர். வரும் வாரங்களில்  மீன்பாடுகள் மாற்றத்தை பொருத்தே மீன்கள் விலையில் விரைவில் மாற்றம் ஏற்படும்’’ என்றார்.

Tags : Daruvaikulam , Daruvaikulam, sea area, fishing slump
× RELATED தருவைகுளத்தில் திருப்பயணிகள் இல்லம் திறப்பு