×

கொரோனா, ஒமிக்ரான் பரவல் எதிரொலி சென்னையில் 20 விமானங்கள் ரத்து: பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்தது

சென்னை: கொரோனா, ஒமிக்ரான் பரவல் காரணமாக சென்னையில் 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் தினமும் வருகை, புறப்பாடு என 270 விமானங்கள் இயக்கப்படுகிறது. சுமார் சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பயணிக்கின்றனர். கடந்த சில தினங்களாக கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதாலும், பயணிகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று வருகை விமானங்கள் 104, புறப்பாடு விமானங்கள் 102 இயக்கப்பட்டது. அதேபோல் வருகை பயணிகள் 9,900, புறப்பாடு பயணிகள் 10,100. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த 15 நாட்களில் 270ல் இருந்த விமான சேவைகள் 206 ஆகவும், பயணிகள் எண்ணிக்கை 30 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரமாகவும் குறைந்துள்ளன.

கொரோனா வைரஸ் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாலும், ஒமிக்ரான் பீதியும்தான் காரணம். இதனால் விமான பயணங்களை பயணிகள் புறக்கணிப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் டெல்லியில் இருந்து சென்னைக்கு வருகை, புறப்பாடு 6 விமானங்கள், கொல்கத்தாவில் இருந்து வருகை, புறப்பாடு 4 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து வருகை, புறப்பாடு 4 விமானங்கள், மும்பையில் இருந்து வருகை, புறப்பாடு 2 விமானங்கள், பெங்களூருவில் இருந்து வருகை, புறப்பாடு 2 விமானங்கள், புனேவில் இருந்து வருகை, புறப்பாடு 2 விமானங்கள் என 20 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே ஏர்இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட விமான நிறுவனங்கள் வெளியிட்ட அறிவிப்பில், உள்நாட்டு பயணிகள் விமான டிக்கெட் எடுத்து பயணம் தடைபட்டால்,  இந்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் அவர்களுக்கு விருப்பப்பட்ட தேதியில், உள்நாட்டிற்குள் எந்த நகரங்களுக்கும் டிக்கெட்களை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Tags : Corona ,Omigron ,Chennai , Corona, Omigron spread echoes 20 flights canceled in Chennai: passenger numbers down
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...