×

நண்டுக்கால் நோயால் வெங்காயம் பாதிப்பு-நஷ்டஈடு வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

கமுதி : கமுதி சுற்று வட்டார பகுதிகளில் நண்டுக்கால் நோய் பாதிப்பால் சின்ன வெங்காயம் விவசாயம் பாதிக்கப்பட்டு வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கமுதி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளான பெருநாழி, டி.வி.எஸ்.புரம், திம்மநாதபுரம், பாப்பிரெட்டிப்பட்டி, ராணி சேதுபுரம், முத்துசெல்லையாபுரம் உள்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆங்காங்கே 1000 ஏக்கருக்கு மேல் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சின்ன வெங்காயம் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது முழு மகசூல் அடைந்து, அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் சின்ன வெங்காயத்தின் செடியின் வேர் பகுதியில் நண்டுக்கால் நோய் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு அதிகப்படியான மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியது. நடப்பாண்டில் வெங்காயத்தின் கொள்முதல் விலை, செலவை விட இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இது மகிழ்ச்சியாக இருந்தாலும், நோய் தாக்குதலால் மகசூல் குறைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு வெள்ளம், வறட்சி ஏற்படும் போது நெல் விவசாயத்திற்கு அரசு நிவாரணம், இழப்பீடு வழங்குவதை போன்று சின்ன வெங்காயம் சாகுபடி செய்து நஷ்டம் அடைந்துள்ள விவசாயிகளுக்கும் அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கமுதி பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Kamuthi: Farmers are worried that small onion farming is being affected by crab disease in Kamuthi area.
× RELATED போராடும் பெண்களை ஒடுக்குவதற்காக...