டிஸ்லெக்சியா நோயால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் கல்வி வழங்கப்படுகிறது: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: சென்னையை சேர்ந்த கே.இளங்கோ என்பவர், டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதற்கான நிபுணர் குழு அமைப்பதற்கும், பெற்றோர் ஆசிரியர் சங்கங்களை மறு சீரமைக்கக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தமிழக பள்ளி கல்வித் துறை சிறப்பு வழக்கறிஞர் மைத்ரேயி சந்துரு ஆஜராகி, பள்ளி கல்வி ஆணையரகத்தின் சார்பில் இணை இயக்குனர் அமுதவல்லியின் பதில் மனுவை தாக்கல் செய்தார்.

அதில், சம்க்ரா சிக்‌ஷா என்ற திட்டத்தின் அடிப்படையில் டிஸ்லெக்சியா குறைபாடுள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஆசிரியர்கள் மூலம் பயிற்றுவிக்கப்படுகிறது. பள்ளிகல்வித் துறையில் 2,398 சிறப்பு ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் டிஸ்லெக்சியா உள்ளிட்ட 21 வகையான குறைபாடுடைய மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்கள். சென்னை டிஸ்லெக்சியா சங்கம் சார்பில் அந்த குறைபாடு குறித்து 1 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 1ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை 346 மாணவர்கள் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர உளவியல் ஆலோசனை வழங்குவதற்காக, 10 நடமாடும் ஆலோசனை மையங்கள் தமிழ்நாட்டில் முன்னோடி திட்டமாக தொடங்கப்பட்டு உள்ளன. பெற்றோர், ஆசிரியர் சங்கங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால், அவற்றை தற்போதைக்கு மறுசீரமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறப்பட்டிருந்தது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்ட பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, ஏற்கனவே அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. அதேசமயம் அந்த நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்துவதை அரசு உறுதிசெய்யவும், கண்காணிக்கவும் வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Related Stories: