×

2வது இன்னிங்சிலும் சதம் விளாசினார் கவாஜா இங்கிலாந்துக்கு 388 ரன் இலக்கு: கடைசி நாளில் தாக்குப்பிடிக்குமா?

சிட்னி: ஆஸ்திரேலிய அணியுடனான 4வது டெஸ்ட் போட்டியில் 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை விளையாடும் இங்கிலாந்து அணி, இன்று கடைசி நாள் சவாலை எதிர்கொள்கிறது.சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆஸி. அணி 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 3ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்திருந்தது. பேர்ஸ்டோ 103 ரன், ஜாக் லீச் 4 ரன்னுடன் ஆட்டத்தை தொடர்ந்தனர்.லீச் 10, பேர்ஸ்டோ 113 (158 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), ஸ்டூவர்ட் பிராடு 15 ரன் எடுத்து பெவிலியன் திரும்ப, இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 294 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆண்டர்சன் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸி. தரப்பில் போலண்ட் 4 விக்கெட், கம்மின்ஸ், லயன் தலா 2, ஸ்டார்க், கிரீன் தலா 1 விக்கெட் எடுத்தனர்.

122 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸி. அணியின் முன்னணி வீரர்கள் வார்னர் 3, ஹாரிஸ் 27, லாபுஷேன் 29, ஸ்மித் 23 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அந்த அணி 86 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறிய நிலையில், உஸ்மான் கவாஜா - கேமரான்  கிரீன் இணைந்து உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அபாரமாக விளையாடிய கவாஜா 2வது இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார்.  கவாஜா - கிரீன் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 179 ரன் சேர்த்தது. கிரீன் 74 ரன் (122 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), அலெக்ஸ் கேரி (0) அடுத்தடுத்து வெளியேற, ஆஸ்திரேலியா 6 விக்கெட்  இழப்புக்கு 265 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தது.  கவாஜா 101 ரன்னுடன் (138 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து தரப்பில்  ஜாக் லீச் 4, மார்க் வுட் 2 விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, 388 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன் எடுத்துள்ளது. கிராவ்லி 22, ஹசீப் 8 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி இன்னும் 358 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்த முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் டிரா செய்து கவுரவம் காக்குமா? அல்லது எதிர்ப்பின்றி சரணடையுமா? என்ற சுவாரசியமான கேள்விகளுடன் இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.





Tags : Kawaja ,England , Kawaja scored a century in the 2nd innings 388-run target for England: Will they bat on the last day?
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்