×

பயணிகள் விரைவாக சோதனையை முடிக்க வசதியாக சென்னை விமான நிலையத்தில் புதிய திட்டம்

மீனம்பாக்கம்: சென்னை விமான நிலையத்தின் உள்நாடு, சர்வதேச முனையங்களில் புறப்பாடு பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன்படி விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள், தங்களது போர்டிங் பாஸ்களை பெறும்போது, உடமைகளின் மேல் ஒட்டக்கூடிய “டேக்” என்ற  ஸ்டிக்கர்களை, விமான நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரங்களில் பெற்று, உடமைகளில் தாங்களாகவே ஒட்டி கொள்ளலாம். இதனால் பயணிகள் சோதனை (செக்-இன்) கவுன்டரில் வரிசையில் நிற்பது தவிர்க்கப்படும். நேரமும் சேமிக்கப்படும். தங்களுடைய உடமைகளில், அந்தந்த பயணிகளே நேரடியாக ஸ்டிக்கரை ஒட்டுவதால், கவுன்டரில் தவறுதலாக மாற்றி ஒட்டுவது போன்றவைகள் தவிர்க்கப்படும். பயணிகளின் உடமைகளில் சுயமாக பயணிகளே ஸ்டிக்கரை ஒட்டி, உடமைகளை விமானத்திற்கு அனுப்பும் பயணியரின் பயண அனுபவத்தை அதிகரிக்கும் வகையிலான இந்த  புதிய திட்டம் சென்னை விமான நிலையத்தில் சோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையம் நவீனமயமாகி செயல்பாட்டிற்கு வரும்போது, பயணிகள் தங்கள் உடமைகளில் அவர்களே ஸ்டிக்கர் ஒட்டும் வசதி முழுமையாக அமுலுக்கு வரும். இதற்காக சென்னை உள்நாடு முனையம் (டி-1) சர்வதேச முனையம் (டி-4) ஆகியவற்றில் தலா 4 இயந்திரங்கள் வீதம், 8 இயந்திரங்கள் நிறுவப்பட உள்ளன. இவற்றை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கைகள் அதிகரிப்பை பொறுத்து, இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால் பயணிகள் செக்-இன் நடைமுறையை இடையூறு இல்லாமலும், மனித குறுக்கீடு இல்லாமலும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai airport , Passengers fast, check, facility, Chennai Airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்