சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம்: கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை திட்டம்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகமாக உள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கோவை ஆகிய மாவட்டங்களில் கொரோனா பதிப்பில் கூடுதல் கவனம் செலுத்த சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3 நாட்களில் தற்போது இரட்டிப்பாகி வருகிறது. கடந்த டெல்டா அலையின் போது 4 முதல் 5 நாட்களாக இரட்டிப்பாகி வந்த கொரோனா பாதிப்பு தற்போது 48 மணி நேரம் முதல் 3 நாட்களில் இரட்டிப்பாகி வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவலை தெரிவித்துள்ளனர். நோய் தொற்று உறுதியாகக்கூடியவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் தொடர்ந்து பாதிப்பை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தற்போது தமிழகத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 23% மட்டுமே மருத்துவ சிகிச்சைக்கான தேவை இருப்பதாகவும் அதில் 9% மட்டுமே ஆக்சிஜன் தேவை இருப்பதாகவும் 2% நபர்கள் ஐசியு படுக்கையில் இருப்பவர்களாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது மருத்துவமனை சிகிச்சையில் இருப்பவர்களில் 90%க்கும் மேற்பட்டோர் 2 தவணை தடுப்பூசி முழுமையாக செலுத்தாதவர்களாக இருப்பதாக தகவல் தெரிவித்துள்ள சுகாதாரத்துறை கொரோனா 3வது அலையில் 77 சதவீதத்தினருக்கு இதுவரை மருத்துவ சிகிச்சை என்பது தேவைப்படவில்லை என்பதை தெரிவித்துள்ளது. தொடர்ந்து தடுப்பூசி செலுத்தாதவர்கள் மீதான பாதிப்பு அதிகமாக கண்டறியப்பட கூடிய சூழ்நிலையில் மருத்துவ தேவை என்பது இருப்பதன் காரணமாக உடனடியாக பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என்பதை சுகாதாரத்துறை தகவலாக தெரிவித்துள்ளது.

Related Stories: