×

புதுவை நகராட்சி அதிரடி தொடர்கிறது வரி செலுத்தாத மருத்துவமனை, 4 கடைகள், ஒரு வீட்டிற்கு சீல்-ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர்கள் திடீர் போராட்டம்

புதுச்சேரி : புதுச்சேரியில் வரி செலுத்தாத தனியார் மருத்துவமனை, 4 கடைகள், ஒரு வீட்டிற்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு கடைக்கு சீலை அகற்ற ஓய்வுபெற்ற ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி நகராட்சிக்கு உரிய வரியை சிலர் சரிவர செலுத்துவது இல்லை. இதனால் நகராட்சிக்கு வருவாய் பாதித்துள்ளது. இதனால் நகராட்சி ஊழியர்களுக்கு 5 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஓய்வூதியதாரர்களுக்கும் பென்ஷன் வழங்குவது தடைபட்டுள்ளது. இதனால் நீண்ட காலமாக வரி செலுத்தாத கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் புதுச்சேரி நகராட்சி கடந்த சில நாட்களாக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

மதுபார், தனியார் திருமண மண்டபம் என அதிரடியாக சீல் வைத்து வரியை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கை நேற்றும் நீடித்தது. முத்தியால்பேட்டையில் ஒரு தனியார் மருத்துவமனை, நேரு வீதியில் ஜவுளிக்கடை அருகேவுள்ள பொம்மை கடை, மறைமலையடிகள் சாலை வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகேவுள்ள 3 கடைகள், முத்து மாரியம்மன் கோயில் வீதியிலுள்ள ஒரு வீடு ஆகியவற்றுக்கு நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை சீல் வைத்தனர்.

முதலியார்பேட்டை பாரதி மில் எதிரேவுள்ள வீட்டு உபயோக மின்சாதன பொருட்கள் கடைக்கு ஏற்கனவே சீல் வைக்கப்பட்டு இருந்தது. அதன் உரிமையாளர் குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டு, மீதமுள்ள தொகையை பிறகு செலுத்துவதாக உறுதியளித்துள்ளார். அதன்பேரில், வைக்கப்பட்ட சீலை அகற்றுவதற்கு ஆணையர் சிவக்குமார் தலைமையிலான அதிகாரிகள் அங்கு வந்தனர். இதனை அறிந்த ஓய்வுபெற்ற நகராட்சி ஊழியர்கள் 15க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து, சீலினை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், கடை முன்பு தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சரிவர வரியை வசூலிக்காததால் தான் 5 மாதமாக எங்களுக்கு பென்ஷன் வழங்கப்படவில்லை. எனவே, வரி பாக்கி தொகையை முழுமையாக வசூலித்த பிறகே சீலை அகற்ற வேண்டும் எனக்கூறி, ஆணையரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து, கடை உரிமையாளர், மீதமுள்ள வரி பாக்கி தொகைக்கு காசோலையை ஆணையரிடம் அளித்தார். அதன்பிறகு சீலை அகற்ற ஊழியர்கள் சம்மதித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Puduvai Municipal Action , Pondicherry: Municipal authorities sealed a tax-free private hospital, 4 shops and a house in Pondicherry. Curtain for a shop
× RELATED இஸ்லாமியர்கள் குறித்து அவதூறு...