×

கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கியதுபோல் தமிழகத்தில் அம்மா உணவகங்களை மூட மாட்டோம்: எடப்பாடிக்கு முதல்வர் பதில்

சென்னை: கலைஞர் கொண்டு வந்த திட்டங்களை அதிமுக ஆட்சியில் முடக்கியதுபோல் தமிழகத்தில் அம்மா  உணவகங்களை நாங்கள் உறுதியாக மூட மாட்டோம் என்று எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று கவர்னர் உரை மீதான விவாதத்திற்கு பதிலளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:​ அம்மா மினி கிளினிக்குகளை மூடிவிட்டோம், அம்மா உணவகத்தை கவனிக்கவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் பட்டியல் படித்தார். இதுபோன்ற பட்டியலை படிக்க வேண்டுமானால் என்னிடம் நிறையவே இருக்கிறது.

 கலைஞர் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் மாபெரும் சட்டமன்ற - தலைமை செயலக வளாகம் கட்டப்பட்டு, அது அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. அந்த இடத்தில்தான் சட்டமன்றமும் நடந்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், சட்டமன்றம் நடந்த இடத்தை மருத்துவமனையாக மாற்றியது யார்?  அண்ணா நூற்றாண்டு விழா நினைவாக ரூ.170 கோடி மதிப்பீட்டில் எட்டு மாடி அளவில்  கட்டப்பட்ட மாபெரும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்ற முனைந்ததும், பராமரிக்காமல் பாழடைய வைத்ததும் யார்? அங்கிருந்த அண்ணாவின் சிலையின் கீழ் இருந்த கலைஞர் பெயரை மறைத்தது யார்?

கலைஞர் காப்பீட்டு திட்டத்தில், கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தில் கலைஞர் பெயரை நீக்கியது யார்? செம்மொழி பூங்காவில் கலைஞர் பெயரை செடி, கொடிகளை வைத்து மறைத்து பராமரிக்காமல் விட்டது யார்? கடற்கரை பூங்காவில் இருந்த கலைஞர் பெயரை எடுத்தது யார்? ராணிமேரி கல்லூரியில் கலைஞர் அரங்கத்தின் பெயரை நீக்கியது யார்? கலைஞர் கொண்டு வந்தார் என்பதற்காக பெரியார் பெயரில் அமைந்த சமத்துவபுரங்களை பாழ்படுத்தியது யார்? உழவர் சந்தைகளை இழுத்து மூடியது யார்? தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்ட உடன்குடி பவர் கார்ப்பரேசன் லிமிடெட்டை முடக்கியது யார்? நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், வருமுன் காப்போம் திட்டம் ஆகியவற்றை கிடப்பில் போட்டது யார்?  மதுரவாயல்-சென்னை துறைமுக உயர்மட்ட சாலை திட்டத்தை முடக்கியது யார்? சமச்சீர் கல்வி பாடப்புத்தகத்தில் கலைஞர் எழுதிய செம்மொழி வாழ்த்து பாடலையும், 7ம் வகுப்பு பாடத்திட்டத்தில் நாடக கலை குறித்த பாடத்தில் இருந்த கலைஞர் பெயரையும் ஸ்டிக்கர் வைத்து மூடி மறைத்தது யார்?

 இப்படி வரிசையாக நீண்டநேரம் என்னால் சொல்ல முடியும். பல கேள்விகளை கேள்வி கேட்க முடியும். இதை எல்லாம் நீங்கள் செய்தீர்கள், அதனால் நாங்கள் செய்தோம் என்று நான் சொல்ல வரவில்லை. அப்படி நடந்துகொள்ளக்கூடிய எண்ணம் எனக்கு ஒருகாலும் ஏற்பட்டதில்லை, வரவும் வராது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் என்றுதான் இன்றைக்கும் இருக்கிறது. தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் என்றுதான் இன்னமும் இருக்கிறது. சென்னை உயர்கல்வி மன்றத்துக்குள் அவருக்கு சிலை இருக்கிறது. அவரது நினைவகம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. அதை இந்த அரசே பராமரித்துக் கொண்டும் இருக்கிறது. அம்மா கிளினிக் என்று பெயர் வைத்தீர்களே தவிர, கிளினிக் இல்லை. இல்லாத ஒன்றை எப்படி இந்த அரசு மூட முடியும்?

அம்மா உணவகம் மூடப்பட்டுள்ளது என்று கூறினார்கள். எந்த அம்மா உணவகமும் மூடப்படக் கூடாது என்பதுதான் என்னுடைய எண்ணம். அதனால்தான் ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று நான் அறிவித்தேன். இன்றுவரை அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.  நிச்சயமாக இருப்பேன், அதில் எந்தவிதத்திலும் மாற்றம் ஏற்படாது என்பதை எதிர்கட்சி தலைவருக்கு நான் இந்த நேரத்திலே தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். தேர்தல் அறிக்கையில் சொல்லியிருக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான கால அவகாசம் என்பது 5 ஆண்டுகள். அந்த 5 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றுவோம் என்பதுதான் தேர்தல் அறிக்கையின் சாராம்சம். ஆனால் பெரும்பாலான வாக்குறுதிகளை 5 மாத காலத்திலே நிறைவேற்றியுள்ள ஆட்சிதான் திமுக ஆட்சி.  இவ்வாறு அவர் பேசினார்.

சாதனைகளை பட்டியலிட்ட முதல்வர்
கடந்த ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அவற்றில் 49 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது.  மீதமுள்ள 17  அறிவிப்புகளில் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளவை 3. இன்னும் அரசாணை வெளியிட வேண்டிய அறிவிப்புகள்14 என்ற நிலையில் உள்ளது. இவை ஏதோ அறிவிப்புகளாக மட்டுமல்ல, வெளியிட்ட அறிவிப்புகளில் 6 மாதத்தில் 75 விழுக்காடு அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. ஆகவே, இந்த அரசு அறிவிப்போடு நிற்பது இல்லை. எல்லா அறிவிப்புகளையும் ஆணைகளாக வெளியிடுகிற அரசு. அந்த அரசாணைகளில் மிக முக்கியமானவைகளை மட்டும் நான்  சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி,  கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய்  குறைப்பு, பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, இலங்கை தமிழர்களுக்கு ரூ.317 கோடியிலான பல்வேறு திட்டங்கள், பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக  கொண்டாட்டம், மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித்தொகை 5,000  ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்வு, விழுப்புரத்தில் சமூகநீதி  போராளிகளுக்கு மணிமண்டபம், நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு ஒரு விழுக்காடு வரி ரத்து, அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, தமிழ்நாடு  அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகை கடன்களும், தமிழக வரலாற்றில்  முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்கள் முழுமையாக ரத்து - இப்படி எண்ணற்ற சாதனைகளை செய்திருக்கிற அரசுதான் இந்த அரசு, உங்கள் அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஆட்சி பொறுப்புக்கு வந்தவுடன் அம்மா உணவகங்கள் தொடரும் என்று நான் அறிவித்தேன். இன்று வரை அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன். நிச்சயமாக இருப்பேன்.

Tags : Amma ,Tamil Nadu ,AIADMK ,Chief Minister ,Edappadi , Artist, AIADMK, Tamil Nadu, Amma Restaurant, Edappadi, Chief Minister
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...