×

கடந்த 7 நாட்களாக நடைபெற்ற கஞ்சா விற்பனை தொடர்பான சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல்

சென்னை : கடந்த 7 நாட்களாக நடைபெற்ற கஞ்சா விற்பனை தொடர்பான சோதனையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்பேரில், காவல் அதிகாரிகள் தலைமையிலான காவல் குழுவினர், கடந்த 7 நாட்கள் கஞ்சா விற்பனை தொடர்பான சிறப்பு சோதனை மேற்கொண்டனர்.  

அதில் கஞ்சா வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.10,12,500 /- மதிப்புள்ள, 101 கிலோ 25 கிராம் கஞ்சா மற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
    
சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன் பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

அதன்படி தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 31.12.2021 முதல் 06.01.2022 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

கஞ்சா கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூபாய் 10,12,500/- மதிப்புள்ள 101 கிலோ 25 கிராம் எடை கொண்ட கஞ்சா, ரொக்கம் ரூ.600/- மற்றும் சட்ட விரோத கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் குறிப்பிடும்படியாக H-1 வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் கடந்த 03.01.2022 அன்று மின்ட் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணித்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த ஒரு நபரை பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்குபின் முரணாக பதில் கூறியுள்ளார்.  

சந்தேகத்தின் பேரில் அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் பெருமளவு கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று போலீசார் விசாரணை  மேற்கொண்டனர்.
 
வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் பிடிபட்ட நபர் 1.மங்கராஜ், வ/32, த/பெ.தாத்தாபாய், எண்.1/113, பஞ்சதாபிரோடு, லக்சணாபுரம், நரசிபட்டினம், விசாகபட்டினம், ஆந்திர மாநிலம் என்பது தெரியவந்தது.

மேலும் போலீசாரின் விசாரணையில் கைது செய்யப்பட்ட மங்கராஜ் அளித்த தகவலின் பேரில் 2.சரண்ராஜ் (எ) சரண்குமார், வ/24, த/பெ.தடிசெந்தில், எண்.124, காசிபுரம், காசிமேடு, சென்னை 3.நொண்டிலட்சுமி, வ/60, க/பெ.சுந்தர், எண்.168, இந்திரா நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பு, காசிமேடு, சென்னை 4.கவிதா, வ/25, க/பெ.இளங்கோ, எண்.7/D, கணக்கர் தெரு எனபது தெரியவந்தது.

மேலும் திருவொற்றியூர், சென்னை ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம்  96 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடந்த 30.12.2021 புனித தோமையர்மலை காவல் நிலைய உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலந்தூரில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்திற்கு சென்று அங்கு ஆந்திரமாநிலம், விஜயவாடாவிலிருந்து வந்த சந்தேக பார்சலை பிரித்து சோதனை செய்தனர்.

அப்போது முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் டைடோல் வலி நிவாரணை மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மேலும் மேற்படி கூரியரில் வந்த பார்சலில் இருந்த கைப்பேசி எண்களை வைத்து விசாரணை செய்து டைடோல் வலி நிவாரண மாத்திரைகளை இணையவழியில் ஆர்டர் செய்து வாங்கிய 1.கெவின்பாபு, வ/22, த/பெ.வில்சன் ஜான், 2.அருண், வ/22, த/பெ.சேகர், 3.விமல்ராஜ், வ/25, த/பெ.சுரேஷ்குமார், 4.அருண், வ/21, த/பெ.சரவணன், 5.ஜெகநாதன், வ/19, த/பெ.ராமு, ஆகிய 5 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 700 டைடோல் வலிநிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

 விசாரணையில் மேற்படி நபர்கள் அளித்த  தகவலின் பேரில்  S-1 புனித தோமையர்மலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 03.01.2022 அன்று  ஆந்திராமாநிலம், விஜயவாடாவிலிருந்து முறையான மருத்துவ பரிந்துரை சீட்டு இல்லாமல் கூரியரில் டைடோல் வலி நிவாரண மாத்திரைகளை அனுப்பி வைத்த மெடிக்கல் கடை உரிமையாளர்கள் 1.சீனிவாசராவ், வ/42, த/பெ.சத்தியநாராயணன், த/பெ.வெங்கட்ராவ், எண்.33/25, பெல்புசோபாநத்ரி, விஜயவாடா, ஆந்திரப்பிரதேச மாநிலம் 3.ரமேஷ்குமார்,வ/41, த/பெ.நரசிம்மராவ், எண்.202, சத்குருவிலாஸ், விஜயவாடா, ஆந்திரப்பிரதேச மாநிலம் மற்றும் ஊழியர் 2.ஶ்ரீராம், வ/42, த/பெ.சத்திய நாராயணன், எண்.149, ராம் நகர், காலனி, அஜித்சிங் நகர், விஜயவாடா, ஆகிய மூவரை  தனிப்படை காவல் குழுவினர் ஆந்திர மாநிலம், விஜயவாடா சென்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

ஆகவே, சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : 10 lakh worth of cannabis and narcotics seized during raids on cannabis during last 7 days
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...