கும்பகோணம் பகுதியில் மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்-நகராட்சி சுகாதார அதிகாரி அதிரடி

கும்பகோணம் : கும்பகோணம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வெளியே சென்ற 50 பொதுமக்களிடம் தலா ரூ.200 வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் நகராட்சி சுகாதார அதிகாரிகள் வசூலித்தனர்.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், கிருமிநாசினி உபயோகித்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை அரசு கட்டாயப்படுத்தி உள்ளது.

கும்பகோணம் பகுதியில் கொரோனா பரவலை தடுக்க நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் பின்பற்றுவதை உறுதி செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்கள் தங்களது அலட்சியத்தால் பொது இடங்களில் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்து வருவதால் கொரோனா பரவல் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டி வந்தனர். இதனை தொடர்ந்து நகராட்சி நகர் நல அலுவலர் பிரேமா தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன் மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கும்பகோணம் உச்சி பிள்ளையார் கோவில் அருகே ஆய்வில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த சுமார் 50 பேரிடம் தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மேலும் பொது இடங்களுக்கு வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியம் மீறினால் இதுபோன்ற அபராதம் விதிப்பதுடன் சட்ட ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்நல அலுவலர் பிரேமா எச்சரித்துள்ளார்.

Related Stories: