×

பொங்கல் பண்டிகையையொட்டி நாகையில் மண் பானைகள் தயாரிப்பு மும்முரம்

நாகை : தை மாதம் முதல் தேதியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு உழவர் திருநாள் என்ற சிறப்பு பெயரும் உண்டு. தமிழர்களின் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுவது பொங்கல் பண்டிகை. ஆண்டுதோறும் வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள், சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த பொங்கல் நாளில் அடுப்பில் மண்பானை வைத்து அதற்கு பொட்டு வைத்து பானையை சுற்றி மஞ்சள் கட்டி அதில் பொங்கல் வைப்பார்கள். தற்போது மண்பானையின் பயன்பாடு குறைந்து பித்தளை, அலுமினியம் போன்ற பாத்திரங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. இருப்பினும் பொங்கல் பண்டிகையன்று மண் பானையில் பொங்கலிடுவதை தமிழர்கள் பாரம்பரியமாக நடைமுறையில் வைத்துள்ளனர்.

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் நாகையில் ஒரு சில மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி நாகை அருகே பாப்பாகோவில், நாகூர் குயவர்தெரு உள்ளிட்ட பகுதிகளில் மண்பாண்ட தொழிலாளர்கள் பொங்கல் மண் பானை, மண் அடுப்பு, சட்டி, அகல் விளக்கு உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் மண் பாண்டங்கள் நாகை, நாகூர், மஞ்சக்கொல்லை, புத்தூர், பாப்பாகோவில், திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக எடுத்து செல்லப்படுகிறது.

இதுகுறித்து பாபா கோவிலில் பாரம்பரியமாக மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுவரும் மண்பாண்டத் தொழிலாளிகள் தெரிவித்தது: பித்தளை, அலுமினியம் போன்ற பாத்திரங்கள் அதிகளவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டதால் மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருகிறது. மேலும் மண்பாண்ட பொருட்கள் தயார் செய்ய முக்கிய தேவையான களிமண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக மண்பானை மற்றும் அடுப்புகளை வேக வைக்க வைக்கோலும் கிடைப்பதே இல்லை. கடந்த ஆண்டு ரூ.100க்கு விற்ற ஒரு கட்டு வைக்கோல் தற்போது ரூ.300 கூட கிடைப்பதில்லை. இதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  எனவே நலிவடைந்து வரும் மண்பாண்ட தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

Tags : Naga ,Pongal festival , Nagai: Pongal, celebrated on the first day of the month of January, is also known as Uzhavar Thirunal. As the main festival of the Tamils
× RELATED காதல் ரகசியத்தை உடைத்த நாக சைதன்யா, சோபிதா