×

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலி: உரிமையாளர் உட்பட 4 பேர் படுகாயம்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பூமாரி (60). இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தில் உள்ளது. ஆலையை பூமாரியின் மகன்கள் கருப்பசாமி (44), பரமேஸ்வரன் (41), நாகேந்திரன் (38), ஆறுமுகம் (35) ஆகியோர் நிர்வகித்துள்ளனர். டிஆர்ஓ உரிமம் பெற்ற இந்த ஆலையில் மொத்தம் 6 அறைகள் உண்டு. இங்கு கம்பி மத்தாப்பு, சங்கு சக்கரம், புஸ்வாணம் உள்ளிட்டவைகள் தயாரிக்கப்படுகின்றன. நேற்று காலை பட்டாசு தயாரிக்கும் பணியில் 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது பூமாரியின் மகன் கருப்பசாமி (44), பணியாளர் செந்தில்குமார் (35) இருவரும் பட்டாசுகளுக்கு தேவையான வெடிமருந்துகள் கலக்கும் பணியில் ஈடுபட்டபோது, உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டு ஒரு அறை தரைமட்டமானது. இதில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த உரிமையாளர் பூமாரி (60), மகன் கருப்பசாமி, செந்தில்குமார், மஞ்சள்ஒடைபட்டியை சேர்ந்த முனியசாமி (45) கண்ணகுடும்பன்பட்டியைச் சேர்ந்த காசி (40) கொம்மிங்காபுரத்தை சேர்ந்த பெருமாள் (40), சரஸ்வதி (40) அய்யம்மாள் (38) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் வந்து காயமடைந்தவர்களை மீட்டு சாத்தூர், கோவில்பட்டி அரசு மருத்துவமனைகளில் சேர்த்தனர். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் செந்தில்குமார், கருப்பசாமி, சாத்தூர் அரசு மருத்துவமனையில் காசி ஆகியோரும், திருநெல்வேலிக்கு மேல் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட அய்யம்மாளும் உயிரிழந்தனர். பூமாரி உட்பட 4 பேர் மதுரை மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து ஏழாயிரம்பண்ணை போலீசார், உரிமையாளர் பூமாரி, மகன்களான கருப்பசாமி, பரமேஸ்வரன், நாகேந்திரன், ஆறுமுகம் ஆகிய 5 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் முதல்வர் அறிவிப்பு

*முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், வையம்பட்டி கிராமத்திலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரணமாக தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.

Tags : Sattur , Four killed, four injured in firecracker blast near Sattur
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது