×

ஓபிசி.க்கான இடஒதுக்கீட்டை 10% இட ஒதுக்கீட்டுடன் கணக்கிட முடியாது: உச்ச நீதிமன்றத்தில் திமுக வாதம்

புதுடெல்லி: ஓபிசி இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு புதியதாக வழங்கப்பட்ட கூடுதல் 10சதவீத  இடஒதுக்கீட்டோடு கணக்கிட முடியாது என உச்ச நீதிமன்றத்தில்  திமுக வாதிட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவப் மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் கூடுதலாக 10 சதவீதம் வழங்கியதை அமல்படுத்துவது தொடர்பாக, தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ம் தேதி அறிவிப்பு  வெளியிட்டது. இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார்.

இதேப்போன்று மருத்துவப் படிப்புகளில், அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அனுமதிக்கக் கூடியது தான் என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்குகளில் திமுக.வும், தமிழக அரசும் தங்களை மனுதாரராக இணைத்துக் கொண்டுள்ளது. ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம்  என்பது எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது?’ என ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பிது.

இதற்கு ஒன்றிய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்கா கமிட்டி உத்தரவின் அடிப்படையில்தான் 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடும், ரூ.8லட்சம் என்ற வருமான உச்சவரம்பும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதனால், ஓபிசி இட ஒதுக்கீட்டோடு இதனை ஒப்பிட்டு பார்க்க முடியாது,’ என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘கலந்தாய்வை நடத்தாமல் இருந்து வருவதால் முதுகலை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால், இந்த விவகாரத்தை நீண்ட காலத்திற்கு இழுக்க முடியாது. முதலில் மருத்துவ கலந்தாய்வை நடத்த உத்தரவிட்டு விட்டு, பிறகு இந்த வழக்கை தொடரலாம்,’ என தெரிவித்தார்.

இதையடுத்து, குறுக்கிட்ட நீதிபதி சந்திரசூட், ‘இந்த விவகாரம் தொடர்பாக கடந்த நவம்பர் 25ம் தேதி விசாரித்தபோது 10 சதவீத கூடுதல் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்வதாக தெரிவித்து விட்டு, தற்போது முடியாது என பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளீர்கள். அதனை எப்படி ஏற்க முடியும்?,’ என கேட்டார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் திவான், தத்தா ஆகியோர், ‘பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் என்பதை முடிவு செய்வதற்கு முன்னதாக ஏதேனும் அதுகுறித்து ஆலோசனை நடவடிக்கை எடுக்கப்பட்டதா? ஒன்றிய அரசு தன்னிச்சையாக இந்த முடிவை மேற்கொண்டு விட்டது. அதனை எப்படி ஏற்க முடியும்?,’ என்றனர்.

திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், ‘ஓபிசி இடஒதுக்கீடு விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை இந்த ஆண்டே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். இந்த இடஒதுக்கீடு ஒன்றிய அளவில் முழுமையாக அமல்படுத்தவே வழங்கப்பட்டுள்ளது. இதனை இல்லை என்று கண்டிப்பாக கூற முடியாது.

இதுகுறித்து அனைத்து விவரங்களையும் எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம். ஓபிசிக்கான இடஒதுக்கீட்டை பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கு புதியதாக வழங்கப்பட்ட கூடுதல் 10 சதவீத  இடஒதுக்கீட்டோடு கணக்கிட முடியாது,’ என வாதிட்டார். பின்னர், வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : OBC ,Supreme Court , Reservation for OBC cannot be calculated with 10% reservation: DMK argument in Supreme Court
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பான...