ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றது பாதுகாப்புப் படை!!

ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஊடுருவ முயன்ற 3 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை சுட்டு கொன்றது.ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் சண்ட்கம்  கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு விரைந்த வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

இதனையடுத்து வீரர்கள் கொடுத்த பதிலடியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில் என்கவுன்டரில் பலியான 3 தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என்று காஷ்மீர் மண்டலத்தைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆஃப் போலீஸ், விஜய் குமார் தெரிவித்துள்ளார். மேலும் கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தீவிரவாதிகளிடம் இருந்து 2 எம்-4 கார்பைன்கள் மற்றும் 1 ஏகே ரக துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஓகே கிராமத்தில் 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: