×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் இல்லாததால் மாடவீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்கள்

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்களில் ஏராளமானோர் வருகின்றனர். மேலும், அருகில் உள்ள நான்கு மாடவீதிகளிலும் 20க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள் உள்ளன. இந்த திருமண மண்டபங்களுக்கு வாகன நிறுத்துமிடம் இல்லை. முருகன் கோயில் அமைந்த ஊரில் திருமணம் செய்ய வேண்டும் என்ற வேண்டுதல் இருப்பதாலும், குறைந்த வாடகையாக இருப்பதாலும் திருப்போரூர் பகுதியில் திருமணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதனால் செவ்வாய், சனி, ஞாயிறு தினங்கள் மட்டுமின்றி சுபமுகூர்த்த தினங்களிலும் கோயிலுக்கு வரும் பக்தர்கள், திருமணங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது. அவர்கள், தங்களது வாகனங்களை நான்கு மாடவீதிகளில் சாலையோரம் நிறுத்தி விட்டு கோயிலுக்கும், திருமண மண்டபங்களுக்கும் செல்கின்றனர். மேலும், மேற்கு மாடவீதியில் திருக்குளத்தை ஒட்டி வாகனங்களை நிறுத்துவதால் இந்த பிரதான சாலையில் செல்லும் பேருந்துகள், லாரிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றன.

தெற்கு மாடவீதியில் காவல் நிலையம், பத்திரப்பதிவு அலுவலகம், கிழக்கு மாடவீதியில் தபால் நிலையம் ஆகியவை உள்ளன. இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், கிழக்கு கடற்கரை சாலைக்கு நெம்மேலி வழியாக செல்பவர்களும் நெம்மேலியில் உள்ள அரசு கல்லூரி, தனியார் பள்ளிகளுக்கு செல்பவர்களும் இந்த மாடவீதிகள் வழியாக செல்ல வேண்டும்.

வெளியூர்களில் இருந்து கோயிலுக்கு வரும் வாகனங்களுக்கு நுழைவு வரி வசூலிக்கப்படுகிறது. ஆனால், கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வாகனம் நிறுத்த இடம் ஒதுக்கவில்லை. இதனால், பலரும் தங்களது வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்கின்றனர். தொடரும் இந்த போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க, கோயில் நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து தனி வாகன நிறுத்துமிடம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பார்க்கிங் வசதி இல்லாத திருமண மண்டபங்களுக்கு அனுமதி வழங்குவதை, பேரூராட்சி நிர்வாகம் நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruporur Kandaswamy Temple , Vehicles parked on the corridors due to lack of parking near Thiruporur Kandaswamy Temple
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயில்...