பழநி தைப்பூச திருவிழா பாதயாத்திரை பக்தர்கள் வருகை துவக்கம்-காவடியாட்டம் களைகட்டுகிறது

பழநி : அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று தைப்பூசம். இவ்விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பழநிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருந்தது. தடுப்பூசி செலுத்திக் கொண்டதைத் தொடர்ந்து இந்த ஆண்டு பழநி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

தற்போது ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் பழநி கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் இந்தாண்டிற்கான தைப்பூசத் திருவிழா ஜனவரி மாதம் 12ம் தேதி துவங்குகிறது. 18ம் தேதி தைப்பூசம் ஆகும். வழக்கமாக தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் அரையாண்டுத் தேர்வு விடுமுறை காலம், பொங்கல் பண்டிகை விடுமுறை காலம் மற்றும் தைப்பூச திருவிழா காலம் என 3 பிரிவுகளாக வருவது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை காலத்திலேயே தைப்பூசத் திருவிழா வருகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக தற்போதிருந்தே பாதயாத்திரையாக வரத் துவங்கி உள்ளனர்.

பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பயன்படுத்தும் முக்கிய வழித்தடமாக பழநி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பழநி-புதுதாராபுரம் சாலை, பழநி-உடுமலை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். திருவிழா நேரத்தில் மட்டும் இவ்வழித்தடங்களில் போலீசாரால் பிரத்யேக ரோந்துப்பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நிலையில் மாவட்ட எஸ்பி சீனிவாசன் அறிவுறுத்தலின் பேரில் விபத்து மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் வைகயில் பக்தர்கள் நலன் கருதி தற்போதிருந்தே  இவ்வழித்தடங்களில் போலீசார் ரோந்துப்பணியை துவங்க உள்ளனர்.

பக்தர்கள் கூட்டத்திற்குள் செல்வதற்கு வசதியாக பைக் ரோந்துப்பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம். வழக்கமாக ஆண் காவலர்கள் மட்டுமே பைக் ரோந்துப்பணி மேற்கொள்வர். இந்த முறை பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன்கருதி பெண் காவலர்களும் பைக் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளனர். இதற்காக பெண் போலீசாருக்கு தோழி திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட பைக்குகள் நேற்று பழநி டிஎஸ்பி அலுவலக வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

டிஎஸ்பி சத்தியராஜ் ரோந்துப்பணியை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் டவுன் இன்ஸ்பெக்டர் உதயகுமார், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண் மற்றும் பெண் போலீசார் சுமார் 50 பைக்குகளில் திருவிழா முடிவடையும்வரை சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தொடர் ரோந்துப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலீசாரின் இந்நடவடிக்கை பக்தர்கள் மற்றும் பொதுமக்களிடையே மகிழ்ச்சி மற்றும் நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: