×

திருவொற்றியூரில் அடுக்குமாடி இடிந்து விழுந்த விவகாரம் வீடு இழந்த குடும்பங்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணை: அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்

சென்னை: திருவொற்றியூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவத்தில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று வழங்கினார். திருவொற்றியூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட அரிவாக்குளம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்த  சம்பவத்தில் வீடுகளை இழந்த 28 குடும்பங்களில் 17 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட புதிய குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட அரிவாக்குளம் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் கட்டப்பட்ட 28 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கடந்த 27ம் தேதி இடிந்து விழுந்தது. இத்தகவலை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல நோக்கில் 28 குடும்பங்களுக்கும் முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.28 லட்சம் வழங்க ஆணையிட்டு அன்றைய தினமே வழங்கப்பட்டது. மேலும், முதல்வர் வீடுகளை இழந்த 28 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வாரியத்தின் சார்பில் வழங்கப்படும்  என்று உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைகளை ஏற்று 28 குடும்பங்களில் 17 குடும்பங்கள் மாற்று வீடுகள் பெற ஒப்புக்கொண்டு மாற்று வீடுகளை பெற்று கொண்டுள்ளனர். இந்த 17 குடும்பங்களில் 9 குடும்பங்களுக்கு ஆல் இந்தியா ரேடியோ எர்ணாவூர் திட்ட பகுதியிலும், 9 குடும்பங்களுக்கு என்.டி.ஒ குப்பம் திட்ட பகுதியிலும் மாற்று வீடுகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 11 குடும்பங்கள் அந்த இடங்களில் உள்ள பழைய குடியிருப்பினை அப்புறப்படுத்திவிட்டு புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பில் எங்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என்று எங்களிடம் எழுதி கொடுத்து விட்டனர்.  மறு கட்டுமானம் வரை வெளியே வாடகைக்கு இருக்கும் காலத்திற்கு அரசு தருகின்ற கருணை தொகை ரூ.24,000 நிதி அவர்களுக்கு வழங்கப்படும்.

11 குடும்பங்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு புதிய குடியிருப்பு கட்டிடப் பணி முடிந்தவுடன் அவர்களுக்கு அதே பகுதியில் வீடுகள் ஒதுக்கப்படும். மேலும், தரக்கட்டுபாடு குழுவின் அறிக்கை கிடைத்தவுடன், அத்திட்ட பகுதியில் உள்ள மீதமுள்ள 308 வீடுகளில் வாழும் குடும்பங்கள் படிப்படியாக காலி செய்து கொடுத்தால் அப்பகுதியிலேயே நல்ல தரத்துடன் வீடுகள் கட்டப்பட்டு அங்கு குடியிருந்தவர்களுக்கே மீண்டும் வீடுகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் வட சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாதவரம் சுதர்சனம், கே.பி.சங்கர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ், வாரிய தலைமை பொறியாளர் இராம.சேதுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tiruvottiyur Housing ,Minister ,Thamo Anparasan , Tiruvottiyur, Allocation, Order, Minister Thamo Anparasan
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...