நெல்லை- கன்னியாகுமரி 4 வழிச்சாலையில் சுழலும் கண்காணிப்பு காமிரா பொருத்தம்: விபத்து, திருட்டுகளை எளிதில் கண்டுபிடிக்கலாம்

நெல்லை:  தமிழகத்தில் நகர்ப்புறங்களில் மக்கள் அதிகளவில் கூடும் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், கடை வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களை கண்காணிக்கும் வகையிலும், பொது இடங்களில்  நடைபெறும் கொலை, ெகாள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை பதிவு செய்யும் வகையிலும் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் குற்றங்கள் குறித்த விசாரணையின் போது துப்புதுலக்க போலீசாருக்கு இந்த காமிராக்கள் பெரிதும் உதவுகிறது.

இதேபோல் மாநில மற்றும் தேசிய அளவிலான 4 வழிச்சாலைகள், நெடுஞ்சாலைகளில் நடைபெறும் வாகன விபத்துகள், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை பதிவு செய்யும் விதத்தில் சாலையின் நடுவில் உள்ள சென்டர் மீடியன் மற்றும் வாகன சோதனைச் சாவடிகளின் அருகிலும் தற்போது சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நெடுஞ்சாலைகளில் உள்ள சோதனைச் சாவடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளன. அங்கிருந்து காமிராக்களில் பதிவு செய்யப்படும் வீடியோக்கள் கண்காணிக்கப்படுகிறது.

நெல்லை முதல் கன்னியாகுமரி வரையுள்ள 4 வழிச்சாலையில்  சமீபத்தில் சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து தாழையூத்து, கங்கைகொண்டான் உள்ளிட்ட பல இடங்களில் குறிப்பிட்ட கிமீ இடைவெளியில் சுழலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள சென்டர்மீடியனில் உயரமான  கம்பத்தில் இந்த சுழலும் காமிராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மழை நேரங்களில்  உண்டாகும் இடியினால் காமிராக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக  அக்கம்பத்தின் மேல் பகுதியில் இடிதாங்கி அமைப்பும் உள்ளது.

இக்காமிரா சுழலும்போது அதன் இருபுறமும் உள்ள லென்ஸ்கள் மூலம் சுற்றியுள்ள நான்கு திசைகளிலும் குறிப்பிட்ட தூரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய முடியும். இக்காமிராக்கள் இரவு நேரத்திலும் துல்லியமாக காட்சிகளை பதிவு செய்யும் திறனுடையது. சாலைகளில் விபத்துகளை ஏற்படுத்தி நிற்காமல் செல்லும் வாகனங்கள், திருட்டு, ஆள் கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்லும் வாகனங்கள், கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வாகனங்கள் எந்த இடத்தை கடந்த செல்கின்றன உள்ளிட்ட குற்றச் சம்பவங்களை துல்லியமாக கண்காணித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க இந்த காமிராக்கள் பெரிதும் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: