×

வடகிழக்கு பருவமழை 58% கூடுதலாக பதிவான நிலையில் தமிழகத்தில் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு: 3 மாவட்டங்களில் குறைந்தது குறித்து ஆய்வு

சென்னை: வடகிழக்கு பருவமழை 58 சதவீதம் கூடுதலாக பதிவாகியுள்ள நிலையில் தமிழகத்தில் 33 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 25ம் தொடங்கியது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக, கடந்த நவ.1ம் தேதி முதல் டிசம்பர் 28ம் தேதி வரை சராசரி அளவான 446 மி.மீட்டரை காட்டிலும் கூடுதலாக 704 மி.மீட்டர் வரை மழை பதிவாகியுள்ளது. இந்த கால கட்டத்தில் மட்டும் 58 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது.

இந்த மழையால் அணைகள், ஏரிகள், குளங்கள், ஊரணிகள் பெரும்பாலானவை முழு கொள்ளளவை எட்டியது. மேலும், இந்த மழை காரணமாக மாநிலத்தில் நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக மாநில நில மற்றும் நீர் வள ஆதார விவர குறிப்பு மையம் ஆய்வு மேற்கொண்டது. 3,238 பகுதிகளில் உள்ள திறந்தவெளி கிணறுகள் மற்றும் 1,480 ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் ஆய்வு செய்யப்பட்டது. தமிழகத்தில் அந்தந்த பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் அளவு, நீர்வள ஆதாரத்துறை மூலம் கணக்கிடப்பட்டது.

இவ்வாறு, டிசம்பர் மாதத்தில் நீர்வள ஆதார விவர குறிப்பு மையம் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் கடந்தாண்டு டிசம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் (1.45 மீ), காஞ்சிபுரத்தில் (0.21மீ), திருவண்ணாமலையில் (2.91மீ), வேலூரில் (4.69மீ), தர்மபுரியில் (4.03மீ), கிருஷ்ணகிரியில் (2.05மீ), கடலூரில் (1.70மீ), விழுப்புரத்தில் (1.82மீ), திருச்சியில் (4.31மீ), கரூரில் (0.02மீ), பெரம்பலூரில் (6.04மீ), புதுக்கோட்டையில் (4.20மீ), அரியலூரில் (2.24மீ), சேலத்தில் (2.61மீ), நாமக்கல்லில் (3.57மீ), ஈரோட்டில் (3.47மீ), கோவையில் (1.94மீ), திருப்பூரில் (2.81மீ), நீலகிரியில் (0.56மீ), திண்டுக்கல்லில் (4.12மீ), மதுரையில் (1.13மீ), ராமநாதபுரத்தில் (1.55மீ), சிவகங்கையில் (3.47மீ), தேனியில் (2.68மீ), தூத்துக்குடியில் (1.09மீ), திருநெல்வேலயில் (3.70மீ), விருதுநகரில் (3.90மீ), கன்னியாகுமரியில் (2.02மீ), கள்ளக்குறிச்சியில் (4.17மீ), தென்காசியில் (4.30மீ), செங்கல்பட்டில் (0.46மீ), ராணிப்பேட்டையில் (3.26மீ), திருப்பத்தூரில் (5.88மீ) நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில் தஞ்சை மாவட்டத்தில் (0.02மீ), திருவாரூரில் (0.00மீ), நாகையில் (0.02மீ) ஆகிய 3 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்த 3 மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் குறைந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என்று நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tags : Tamil , Northeast Monsoon, Tamil Nadu, Groundwater level
× RELATED சதுப்பு நிலங்களை அடையாளம் காணும்...