×

மொரீசியஸ் கடலில் கப்பல் விபத்து 16 மாத சிறைக்கு பிறகு வீடு திரும்பிய கேப்டன்

போபால்: மொரீசியசில் கடந்த 2020ம் ஆண்டு ஜப்பான் எண்ணெய் கப்பல் விபத்துக்குள்ளானதால் சிறையில் அடைக்கப்பட்ட இந்திய கேப்டன் சுனில்குமார் நந்தேஸ்வரர் விடுதலை செய்யப்பட்டு, நேற்று தனது சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 25ம் தேதி ஜப்பான் நாட்டை சேர்ந்த எம்வி வாகாஷியோ என்ற எண்ணெய் கப்பல் சீனாவில் இருந்து பிரேசிலுக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் கப்பல் உடைந்து அதில் இருந்த 1000 டன் எண்ணெய் கடலில் கலந்தது. இதன் காரணமாக கடலின் சுற்றுச்சூழல் மாசடைந்ததாகவும், கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் மொரீசியஸ் அரசு குற்றம்சாட்டியது.

இது தொடர்பாக கப்பலின் கேப்டனான மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த சுனில்குமார் நந்தேஸ்வரர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், 16 மாதங்களுக்கு பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டு, தனது சொந்த ஊரான மத்தியப் பிரதேச மாநிலம், போபாலுக்கு திரும்பியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘‘மொரீசியஸ் சிறையில் இருந்து என்னை விடுவிப்பதற்காக இந்திய கடல்சார் சங்கம் பெரியளவில் உதவிகள் செய்தது. இதன் பொதுச் செயலாளர் அமர்சிங்  தாகூர், மொரீசியஸ் அதிகாரிகள் மற்றும் போர்ட் லூயிசில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், கப்பல் துறை மற்றும் உள்துறை அமைச்சகத்துடன் தொடர்ச்சியாக நடத்திய பேச்சுவார்த்தை நடத்தியதால், நான் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளேன்,’’ என்றார்.



Tags : Mauritius , Mauritius Sea, Shipwreck, Prison, Captain
× RELATED சென்னை – மொரிஷியஸ் விமான சேவை தொடக்கம்