புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் அனைத்து கோயில்களிலும் தரிசனம் செய்ய தடையில்லை: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி

சென்னை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு கோயில்களில் பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை இல்லை என இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தமிழகம் முழுவதும் வரலாற்றுச் சிறப்புமிக்க 50 கோயில்களின் ஆவணப்படங்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: புத்தாண்டு தினத்தன்று அனைத்து கோயில்களும் திறக்கப்படும். சுவாமி தரிசனத்துக்கு தடையில்லை. ஆனால் பக்தர்கள் கொரோனா விதிகளை பின்பற்றி சுவாமி தரிசனம் செய்ய வேண்டும். கோயில் சொத்துகள் 2 வகையாக பிரிக்கப்படுகின்றன. அதில் ஒன்று வருவாய் துறைக்கு ஒத்துப்போகும் சொத்துகள். மற்றொன்று ஒத்துப்போகாத சொத்துகள். இதில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் சொத்துகள் வருவாய்த் துறைக்கு ஒத்துப்போகின்றன. ஒரு லட்சம் ஏக்கர் சொத்துகள் வருவாய் துறைக்கு ஒத்துப்போகாத வகைகளாக இருக்கின்றன. இவற்றை கணக்கிடுவதற்காக 40 வட்டாட்சியர்கள், 150 சர்வேயர்கள் பணியமர்த்தப்பட்டு சொத்துகள் கணக்கெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். தமிழகத்தின் 5 கோயில்களில் சித்த மருத்துவமனைகள் உள்ளன. மேலும் தேவைப்படும் கோயில்களில் சித்த மருத்துவமனைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோயில்களின் வரலாறு அடங்கிய தொகுப்பு நூல் ஒன்றும் தயாரிக்கப்படுகிறது. பழமையும் வரலாற்று சிறப்புமிக்க 50 கோயில்கள் பற்றிய பெருமைகள் 3 நிமிட குறும்படமாக தயாரிக்கப்படுகிறது. இதில் பழனி, ராமேஸ்வரம், சமயபுரம் ஆகிய குறும்படங்களின் தயாரிப்பு முடிவடையும் நிலையில் உள்ளன.

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை சிறப்பாக நடத்த பள்ளி வளர்ச்சி குழு தொடங்கப்பட்டுள்ளது. 551 கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வருகிறது. திருப்பணிகள் முடிவடையவுள்ள  கோயில்களில் விரைவில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்படும். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் அருகில் உள்ள யாத்திரிகர்கள் தங்கும் விடுதி அவசர கோலத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை முறையாக கட்டவில்லை. இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று மீண்டும் சீரமைத்து, விரைவில் திறக்கப்படும். தமிழகத்தில் 2 ஆண்டுகளில் கோயில்களுக்கு சொந்தமான 250 தெப்பக்குளங்கள் சீரமைக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு, ஏகாம்பரநாதர் கோயில், குமரக்கோட்டம் முருகன் கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவிடம் சென்று, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது, இந்து அறநிலையத்துறை ஆணையர்  குமரகுருபரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாண் இயக்குனர் சந்தீப்மன், கலெக்டர் ஆர்த்தி, டிஐஜி சத்யபிரியா, எஸ்பி சுதாகர், எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், ஒன்றிய திமுக செயலாளர் பி.எம்.குமார் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: