×

தமிழகத்தில் இயங்கும் எஸ்பிஐ கிளையில் தமிழ் புறக்கணிப்பு... இந்தி தெரியாதவருக்கு தமிழ், ஆங்கிலம் இல்லாத இந்தி படிவங்கள் வழங்கப்பட்டதால் சர்ச்சை!!

சென்னை : சென்னையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கி கிளை ஒன்றில் இந்தி தெரியாத வாடிக்கையாளருக்கு இந்தியில் அச்சிடப்பட்ட படிவம் வழங்கப்பட்டதுடன் தமிழ், ஆங்கிலத்தில் படிவம் இல்லை என்று கூறியது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் இந்தி திணிப்பு குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு சென்ற வசந்த குமார் என்ற வாடிக்கையாளர் லாக்கரை திறப்பதற்கான படிவத்தை கேட்டுள்ளார்.

அதில் லாக்கர் எண், கையெழுத்து ஆகிய விவரங்கள் மட்டுமே ஆங்கிலத்தில் இருந்த நிலையில், மற்ற அனைத்து விவரங்களும் இந்தியில் இருந்துள்ளது. இந்தி தெரியாத தனக்கு தமிழ், அல்லது ஆங்கிலத்தில் படிவம் வழங்குமாறு வங்கி அலுவலர்களிடம் அவர் கேட்ட போது, புதிதாக அச்சிடப்பட்ட படிவம் இந்தியில் மட்டுமே இருப்பதாக பதில் கிடைத்துள்ளது. இது தொடர்பாக வசந்த் குமாரின் மகள் சுசித்ரா ட்விட்டர் மூலம் பாரத ஸ்டேட் வங்கிக்கு புகார் அளித்துள்ளார். இதனிடையே சர்ச்சை குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ராஜா அண்ணாமலை புரம் பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள், இந்த விவகாரத்தை தலைமை அலுவலகமே கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.


Tags : SBI ,Tamil Nadu , எஸ்பிஐ
× RELATED மூத்த குடிமக்களின் ஃபிக்சட் டெபாசிட்...