அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் சோளிங்கர் உட்பட 10 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையம்

சென்னை: சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் குறித்து அமைச்சர் சேகர்பாபு தலைமையில் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் அறநிலையத்துறை முதன்மைச் செயலர் சந்தரமோகன், ஆணையர் குமரகுருபரன், கூடுதல் ஆணையர்கள் திருமகள், ஹரிப்ரியா உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது 112 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. அதில் 650க்கும் மேற்பட்ட திருப்பணிகள் மற்றும் இதர பணிகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக 450க்கும் மேற்பட்ட கோயில் திருப்பணிகளுக்கு அரசாணை பெறப்பட்டு பணிகள் ஒவ்வொன்றாக தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.  

கோயில்களில் தரமான குங்குமம் திருநீர் வழங்குவது, முதலுதவி மையங்கள் ஏற்படுத்துதல், புதுப்பிக்க வேண்டிய குளங்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவது தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. 5 கோயில்களில் ரோப் கார் சேவைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. 2 கோயில்களில் மின்தூக்கி வசதி ஏற்படுத்தப்படும்.திருவண்ணாமலை, மேல்மலையனூர், சோளிங்கர், மருதமலை உட்பட 10 கோயில்களில் முதலுதவி மருத்துவ மையங்கள் தொடங்கப்படும். ஒமிக்ரான் பரவல் பற்றி, வரும் 30 மற்றும் 31ம் தேதிகளில் முதல்வர் தலைமையிலான துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்.

இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பின், பக்தர்கள் மகிழ்ச்சிக்கு இடையூறு இல்லாமல் கட்டுப்பாடுகள் குறித்து முடிவுகளை முதல்வர் அறிவிப்பார். திருத்தணி, திருவரங்கம், திருவேற்காடு, சமயபுரம் உட்பட 10 திருக்கோயில்களில் தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக பிரசாதம் வழங்குவதற்கான முதல்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலுக்கு சொந்தமான சுமார் 114 சமய நூலகங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் உள்ள கோயில்களில் அதிகளவில் பக்தர்கள் வருகை தரும் இடங்களில் புதிய சமய நூலகங்கள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

‘பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்பப்படும்’

பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறுகையில், ‘கோயில்கள் சார்பாக நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் நிரப்பப்படும். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கட்டிட தன்மை பொறியாளர்களை கொண்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆய்வு முடிந்தபின் பள்ளி கட்டிடங்களின் தன்மைக்கேற்ப பணிகள் தொடங்கப்படும்.’ என்றார்.

Related Stories: