×

யானைகள் நிறைந்த வனப்பகுதியில் திக்..திக்.. பயணம்: நள்ளிரவில் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று கர்ப்பிணிக்கு சிகிச்சையளித்த மருத்துவ குழு

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே நள்ளிரவில் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று, கர்ப்பிணிக்கு மருத்துவ குழுவினர் உரிய நேரத்தில் சிகிச்சையளித்தனர். யானைகள் நிறைந்த வனப்பகுதியில் திக்.. திக்.. பயணம் மேற்கொண்ட மருத்துவ துறையினரை, கிராம மக்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பெட்டமுகிலாளம் ஊராட்சி கடமகுட்டை கிராமத்தை சேர்ந்த தொழிலாளி முனியப்பன். இவரது மனைவி மத்தூரி(26). இவர்களுக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த மத்தூரிக்கு, நேற்று முன்தினம் மாலை பிரசவ வலி ஏற்பட்டு, வீட்டிலேயே அழகான பெண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு இரவு 10 மணியளவில், மத்தூரிக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து, அவரது உறவினர்கள் கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ரஜேஷ்குமாருக்கு, தகவல் தெரிவித்தனர். அவர் தனது மருத்துவக்குழுவினருடன் உடனடியாக அங்கு வருவதாகவும், அந்த பெண்ணை தூளி கட்டி மலையடிவாரத்திற்கு கொண்டு வருமாறும் தெரிவித்தார். கடமகுட்டை கிராமம், சாலை வசதி இல்லாத மலை பகுதியில் உள்ளதால், 3 கிலோ மீட்டர் தூரம் கரடு,முரடான பாதையில் நடந்துதான் செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.அதன்படி, அவர் தலைமையில் சுகாதார ஆய்வாளர் ரங்கநாதன், சுகாதார செவிலியர் மாலாஸ்ரீ, சோபியா, 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் அனிதா உள்ளிட்ட குழுவினர், கொட்டும் பனியில் யானைகள் உலாவும் வனப்பகுதியில் இரவு 12.30 மணியளவில், மலையடிவார பகுதிக்கு சென்றனர்.

ஆனால், அங்கு மத்தூரி மற்றும் உறவினர்கள் இல்லை. இதனால், அவர்களை தொடர்பு கொண்டபோது, செல்போனில் சிக்னல் கிடைக்கவில்லை. தாமதிக்கும் நிமிடங்கள் கர்ப்பிணிக்கு ஆபத்தாக முடியும் என்பதால், மருத்துவ குழுவினர் சிறிதும் தாமதிக்காமல், ஆம்புலன்ஸை அடிவாரத்திலேயே நிறுத்தி விட்டு, நடுங்கும் குளிரில் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்தே செல்ல முடிவு செய்தனர். மலைப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதையும் பொருட்படுத்தாமல் 2 கிலோ மீட்டர் ெதாலைவு சென்ற போது, கர்ப்பிணியை தூளியில் கட்டிக்கொண்டு அவரது உறவினர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களை அங்கேயே நிறுத்தி, நடு காட்டில் வைத்தே மத்தூரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், தூளி மூலமாக ஆம்புலன்ஸ் இருந்த இடத்திற்கு அவரை கொண்டு வந்து, பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தாயையும், சேயையும் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் தாயும், சேயும் தற்போது நலமாக உள்ளனர். இதுகுறித்து மருத்துவ அலுவலர் ராஜேஷ்குமார் கூறுகையில், ‘மலைகிராம மக்கள் அதிகமாக வசிக்கும் கடமகுட்டை கிராமம், மலை பகுதியில் யானைகள் நிறைந்த அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. இக்கிராமத்திற்கு கரடு, முரடான பாதையில் தான் நடந்து செல்ல வேண்டும். நேற்று முன்தினம் மாலை, பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்துள்ளனர்.

அப்போது, ரத்த போக்கு ஏற்பட்டதால் இரவு 10 மணியளவில் எனக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்தவுடன் மருத்துவ குழுவினருடன் சென்று, நடு இரவில் காட்டுப் பகுதியில் நடந்தே சென்று பெண்ணுக்கு சிக்சை அளித்து காப்பாற்றினோம்,’ என்றார். நள்ளிரவில் அடர்ந்த வனப்பகுதியில் மருத்துவ குழுவினருடன் சென்று, கர்ப்பிணியின் உயிரை காப்பாற்றிய மருத்துவ குழுவினரை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Dik , Dik..dik .. Travel in the forest full of elephants: 3 km at midnight. The medical team that walked the distance and treated the pregnant woman
× RELATED தேர்தல் முடிவில் திக்.. திக்..திக்.. பாதாளத்தில் சரிந்த பங்குச்சந்தை