×

திருப்போரூர் கந்தசுவாமி கோயில் சொத்து ஆவணங்கள் கணினியில் பதிவேற்றம்: முதன்முதலாக செயல்படுத்தப்படுகிறது

திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயில் சுமார் 390 ஆண்டுகள் பழமையானது. இக்கோயிலுக்கு 700 ஏக்கர் விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், கட்டிடங்கள் ஆகியவை உள்ளன. இந்த சொத்துக்கள் குறித்த அறநிலையத்துறை ஆவணங்கள், தானமாக வழங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட பதிவுத்துறை ஆவணங்கள், நகை மதிப்பீடு ஆவணங்கள், சிலைகள் குறித்த பதிவேடுகள் ஆகியவற்றை பராமரிக்க புதிய வழிமுறை தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, அதிநவீன ஸ்கேனர் மூலம் ஆவணங்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து, இ பைலாக மாற்றம் செய்யப்படுகிறது. கணினியில் பதிவேற்றம் செய்யும் ஆவணங்கள், சொத்து குறித்த விவரங்களுடன் தலைப்பிடப்பட்டு சேமிக்கப்படுகின்றன.

இந்த ஆவணங்களை எதிர்காலத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார். இதைதொடர்ந்து, முதற்கட்டமாக பதிவுத்துறை, வருவாய்த்துறை, அறநிலையத்துறை ஆவணங்கள், கோப்புகள், பதிவேடுகள், நீதிமன்ற தீர்ப்புகள், அரசு உத்தரவுகள், சிலைகள் மற்றும் நகைகள் குறித்த பதிவேடுகள், சொத்துப் பதிவேடுகள், அறக்கட்டளை ஆவணங்கள், கட்டளை சொத்து குறித்த ஆவணங்கள், நான்கு மாடவீதிகளில் உள்ள 64 சத்திரங்கள் குறித்த ஆவணங்கள் ஆகியவை மட்டும் ஸ்கேன் செய்யும் பணி நேற்று தொடங்கியது. இப்பணி முழுமையடைய குறைந்ததும் 2 முதல் 3 மாதங்கள் ஆகும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் முதன்முதலில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக செயல் அலுவலர் சக்திவேல் தெரிவித்தார்.

Tags : Thiruporur Kandaswamy , Thiruporur, Kandaswamy Temple, Property Documents
× RELATED திருப்போரூர் கந்தசாமி கோயில்...