டெல்டா- ஒமிக்ரான் தேனிலவின் புதிய கலவை வந்து விட்டது டெல்மைக்ரான்: நல்லவனா? கெட்டவனா?...இனிதான் தெரியும்

புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டி படைத்து வருகின்றது. கொரோனாவை கட்டுப்படுத்த புதிய புதிய தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் ஊசிகள் தயாரிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. கொரோனா வைரசின் உருமாற்றத்தால் உருவான, ‘டெல்டா’ வைரசால் ஏற்பட்ட 2வது அலை, உலகம் முழுவதும் பல லட்சம் பேரை பலி வாங்கியது. கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், தென் ஆப்ரிக்காவில் புதிதாக உருவான ஒமிக்ரான் வைரஸ், தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி கொண்டிருக்கிறது. டெல்டாவை விட 3 மடங்கு அதிவேகமாக பரவக் கூடிய இது, குறுகிய காலத்தில் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி விட்டது.

இதன் நோய் அறிகுறிகள் என்ன என்பதே இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனை எதிர்கொள்ளும் வழிமுறைகள் தெரியாமல் மருத்துவ நிபுணர்கள் குழம்பியுள்ளனர். அதே நேரம், ‘இதுவே கடைசி உருமாற்றமாக இருக்க வாய்ப்பில்லை. டெல்டாவும், ஒமிக்ரானும் சேர்ந்த புதிய உருமாற்ற கொரோனா வைரஸ் உருவாக வாய்ப்புகள் இருக்கிறது,’ என விஞ்ஞானிகள் சமீப காலமாக எச்சரித்து வந்தனர். அது, உண்மையாகி விட்டது. தற்போது, டெல்டாவும் ஒமிக்ரானும் இணைந்து, ‘டெல்மைக்ரான்’ என்ற புதிய உருமாற்ற வைரசை உருவாக்கி இருப்பதாக பீதி கிளப்பப்பட்டுள்ளது. டெல்டா, ஒமிக்ரானை விட இது அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டதாகவும், கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும் என கருதப்படுகிறது.

இதை உறுதிப்படுத்த விரிவான ஆய்வுகள் தேவைப்படுகிறது. ஒமிக்ரானுக்கு பிறகு ஏற்படும் கொரோனா வைரசின் பிறழ்வு குறித்த விவரங்கள் எதுவும், உலகின் எந்த சுகாதார அமைப்புகளிடமும் இல்லை. டெல்மைக்ரான் பற்றிய முதல் தகவலை மகாராஷ்டிராவை சேர்ந்த கொரோனா வைரஸ் ஆய்வு சிறப்பு குழுவை சேர்ந்த மருத்துவர் ஷஷாங்க் ஜோஷி மட்டுமே வெளியிட்டு இருக்கிறார். அவர், ‘டெல்மைக்ரான் என்பது டெல்டா- ஒமிக்ரானின் கூட்டுச் சேர்க்கையாக இருக்கிறது. இந்த புதிய வைரசால் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளில் கொரோனா அலை அல்ல; சுனாமியே ஏற்படும் அபாயம் உள்ளது,’ என்று கூறியுள்ளார்.

ஆனால், உலக சுகாதார அமைப்பு, அமெரிக்க நோய் கட்டுப்பாடு மையம் உள்ளிட்ட உலகளாவிய எந்த முக்கியமான சுகாதார அமைப்புகளும், டெல்மைக்ரான் குறித்து இதுவரை எந்த கருத்துக்களையும் முன்வைக்கவில்லை. இந்திய தேசிய கொரோனா பணிக்குழு, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் கூட இது பற்றி எதையும் குறிப்பிடவில்லை. அனைத்து அமைப்புகளும் இப்போதைக்கு ஷஷாங்க்கின் கூற்றை மட்டுமே மேற்கோள் காட்டியுள்ளன.

இது, அதுவாக இருக்க வாய்ப்பில்லை

‘டெல்மைக்ரான்’ என்பது கொரோனா வைரசின் உருமாற்றமாக இருந்தால், அதற்கு அகர வரிசையில் கிரேக்க எழுத்துக்களில் மட்டுமே பெயரிடப்படும். அந்த வகையில் ஒமிக்ரானுக்கு பிறகு உருமாற்றம் ஏற்பட்டால் அதன் பெயர் பி, ரோ, சிக்மா மற்றும் சோ என்ற முதல் எழுத்துக்களில் மட்டுமே வரும். எனவே, டெல்மைக்ரான் கொரோனா வைரசின் பிறழ்வாக இருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமே இப்போதைக்கு ஆறுதல் தரக் கூடியதாக இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர்.

அறிகுறிகள் என்ன?

டெல்டா - ஒமிக்ரான் கலவையில் டெல்மைக்ரான் வைரஸ் உருவாகி இருப்பதாக கூறப்படுவதால், இந்த 2 வைரஸ்களின் அதே நோய் அறிகுறிகளையோ அல்லது அதைவிட கொடுமையான அதிகமான அல்லது  குறைவான அறிகுறிகளை அது காட்டலாம் என்று கருதப்படுகிறது. அதிக காய்ச்சல். தொடர் இருமல், வாசனை அல்லது சுவையுணர்வு இழப்பு, தலைவலி, தொண்டை வலி, சளி உள்ளிட்்ட பாதிப்புக்கள் ஏற்படலாம் என கருதப்படுகிறது.

Related Stories: