பலாத்கார குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தம் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

மும்பை: பெண்கள், குழந்தைகளை பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை வழங்கும் சக்தி குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் நிறைவேறியது. இந்த மசோதாவின் மூலம் பலாத்காரத்தில் ஒருவர் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனையும், அதிகபட்சமாக மரண தண்டனை விதிக்க முடியும். விரைவாக வழக்கை விசாரிக்கவும் இந்த மசோதாவில் அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆந்திராவில் ஆளும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான அரசு திஷா சட்டத்தைக் கொண்டுவந்தது. அதை அடிப்படையாக வைத்து மகாராஷ்டிரா அரசும் சக்தி குற்றவியல் தண்டனைச் சட்டத்தை இயற்றியது. கடந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தில் இந்த மசோதா அறிமும் செய்யப்பட்டு பின்னர் தேர்வுக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், அதிகாரிகள், பெண்கள் அமைப்புகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பிறகு இந்த மசோதாவில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க இந்த மசோதா வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஆஜராவதற்கே தனியாக வழக்கறிஞர், போலீஸார் நியமிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்குள் முடிக்கவும், நீதிமன்றம் வழக்கை 30 நாட்களில் முடிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்படுவோருக்கு 10 ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனையும், வாழ்நாள் சிறையும், அதிகபட்சமாக தூக்கு தண்டனையும் வழங்க முடியும். பாலியல் சீண்டல் குற்றம் ஒருவருக்கு எதிராக நிரூபிக்கப்பட்டால், 3 ஆண்டுகள் சிறையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: