×

தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பது குறித்து மருத்துவ அதிகாரிகளுடன் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் பரவலை தடுப்பது குறித்து மருத்துவ உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தொற்று பரவலை தடுக்க நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக தடுப்பூசி போடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுகாதாரத்துறை மூலம் மெகா சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 600ஆக குறைந்துள்ளது.

இதனால் ஊரடங்கிலும் அதிக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகிறது. ஜனவரி 3ம் தேதி முதல் பள்ளிகள் சுழற்றி முறையில் இல்லாமல் அனைத்து வகுப்பு மாணவர்களும் தினசரி பள்ளிக்கு வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெளிநாடுகளில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் அனைத்து நாடுகளிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 34 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதில் 30 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள், ஒருவர் கேரளாவை சேர்ந்தவர் ஆகும். மேலும், ஒமிக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரிய அளவில் பக்க விளைவுகள் இல்லாமல் விரைந்து குணமாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போது தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர்களும் கலந்து கொள்கிறார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில், ‘‘தமிழகத்தில் ஒமிக்ரான் பரவல் மேலும் பராமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வருபவர்களை தீவிர சோதனைக்கு உட்படுத்துவது, பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது, அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்வது, பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை உறுதி செய்வது உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகளை இன்னும் தீவிரப்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் உத்தரவிட இந்த கூட்டத்தின் மூலம் முடிவு எடுக்கப்பட உள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin ,Tamil Nadu ,General ,Secretariat , Chief Minister MK Stalin's consultation with medical officials today on preventing the spread of Omigran in Tamil Nadu: taking place at the General Secretariat
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...