×

கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு சசிகலா உறவினர் விவேக்கிடம் கோவையில் 3 மணி நேரம் விசாரணை

கோவை: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டை 1991-96 காலக்கட்டத்தில் முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா வாங்கினார். இந்த கொடநாடு எஸ்டேட் சொத்துக்களில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் பங்கு இருக்கிறது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு கடந்த 2017 ஏப்ரல் 24ம் தேதி 11 பேர் கொண்ட கும்பல் இந்த பங்களாவில் புகுந்து காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துவிட்டு, பல்வேறு முக்கிய ஆவணங்கள் கொள்ளையடித்து சென்றது. இக்கொலை, கொள்ளை தொடர்பாக கோத்தகிரி போலீசார், ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சயான், ஜெம்சீர்அலி, சந்தோஷ் சமி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ், சம்பவம் நடந்த மூன்றே நாளில், சேலம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்தார். அதே நாளில், இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மற்றொருவரான சயான் சென்ற காரும் கேரளாவில் விபத்துக்குள்ளானது. இதில், அவரது மனைவியும், குழந்தையும் உயிரிழந்தனர். சயான் படுகாயத்துடன் உயிர் தப்பினார். நீதிமன்ற உத்தரவுபடி கொடநாடு வழக்கில் மீண்டும்  விசாரணை நடக்கிறது. திடீர் திருப்பமாக கனகராஜின் அண்ணன் தனபால், உறவினர் ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சசிகலாவின் அண்ணன் ஜெயராமன், இளவரசி ஆகியோரின் மகன் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் முடிவு செய்தனர். அதன்படி, கோவை போலீஸ் பயிற்சி பள்ளிக்கு விவேக் ஜெயராமன் நேற்று வரவழைக்கப்பட்டார். அவரிடம், மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமி, நீலகிரி மாவட்ட எஸ்பி அஸீஸ் ராவத் மற்றும் தனிப்படை போலீசார் விசாரணையை துவக்கினர். இந்த வளாகத்திற்குள் விவேக்  ஜெயராமனின் வக்கீல் தவிர, வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. விசாரணை சுமார் 3 மணி நேரம் நடந்தது. பின்னர், மேல் விசாரணைக்கு எப்போது அழைத்தாலும் நேரில் ஆஜராகவேண்டும் என விவேக் ெஜயராமனிடம் தனிப்படை போலீசார் எழுத்து பூர்வ கடிதம் வாங்கிக்கொண்டு அனுப்பினர்.  இதுவரை கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 81 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Kodanadu ,Sasikala ,Vivek ,Coimbatore , Kodanadu murder-robbery case Sasikala relative Vivek was interrogated for 3 hours in Coimbatore
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...