×

விஜய் ஹசாரே டிராபி அரையிறுதியில் சவுராஷ்டிரா, சர்வீசஸ்: விதர்பா, கேரளா வெளியேற்றம்

ஜெய்பூர்: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் அரையிறுதியில் விளையாட சவுராஷ்டிரா, சர்வீசஸ் அணிகள் தகுதி பெற்றன. சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 3வது காலிறுதியில் விதர்பா - சவுராஷ்டிரா அணிகள் மோதின. டாஸ் வென்ற சவுராஷ்டிரா முதலில் பந்துவீச, விதர்பா 40.3 ஓவரில் 150 ரன் மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. கேப்டன் பைஸ் பைஸல் 23, வாத்கர் 18, ஆதித்யா 14 ரன் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுக்க, தனி ஒருவனாகப் போராடிய அபூர்வ் வாங்கடே 72 ரன் (69 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா 29.5 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன் எடுத்து அபாரமாக வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. பிரேரக் மன்கட் 77 ரன் (72 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), அர்பித் வாசவதா 41 ரன்னுடன் (66 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஜெய்பூர், கே.எல்.சைனி மைதானத்தில் நடந்த 4வது காலிறுதியில் கேரளா - சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சையில் இறங்கின. டாஸ் வென்ற சர்வீசஸ் பந்துவீச்சை தேர்வு செய்ய, சொதப்பலாக விளையாடிய கேரளா 40.4 ஓவரில் 175 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது. ரோகன் குன்னும்மல் 85 ரன் (106 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்), வினூப் மனோகரன் 41 ரன் (54 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), சச்சின் பேபி 12 ரன் எடுக்க, கேப்டன் சஞ்சு சாம்சன் (2 ரன்) உள்பட மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் நடையை கட்டினர்.

இதைத் தொடர்ந்து, 50 ஓவரில் 176 ரன் என்ற இலக்குடன் களமிறங்கிய சர்வீசஸ், 30.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 176 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது. ரவி சவுகான் 95 ரன் (90 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ரஜத் பலிவால் 65* ரன் (86 பந்து, 8 பவுண்டரி) விளாசினர். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் இமாச்சல் - சர்வீசஸ், தமிழகம் - சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்கும் இறுதிப் போட்டி டிச.26ம் தேதி நடைபெற உள்ளது.

Tags : Saurashtra ,Vidarbha ,Kerala ,Vijay Hazare Trophy , Saurashtra, Services: Vidarbha, Kerala eliminated in Vijay Hazare Trophy semi-final
× RELATED ஜூன் 3ல் பாபா ராம்தேவ் ஆஜராக கேரள நீதிமன்றம் ஆணை