×

செல்போன் உதிரிபாக தொழிற்சாலையில் நடந்த ரெய்டை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் சோதனை: முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதாக தகவல்

சென்னை: செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலையில் நடந்த சோதனையை தொடர்ந்து சினிமா தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் அவருக்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாடுகளில் இருந்து செல்போன் உதிரிபாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டதற்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையை அடுத்த பெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் பகுதியில் செல்போனுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் ரெட்மி, ஆப்பிள், பிளாக்பெர்ரி போன்ற 9 வகையான உயர் ரக செல்போன்களுக்கு உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டு அந்தந்த செல்போன் நிறுவனங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும் அந்தந்த செல்போன் நிறுவனங்களின் அலுவலகங்கள், தொழிற்சாலை வளாகத்திலேயே செயல்படுகிறது. செல்போன் நிறுவனங்களில் வருமானத்திற்கு அதிகமாக பணத்தை ஈட்டி பல கோடி வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தது. அதன் அடிப்படையில் ரெட்மி நிறுவனத்தின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் திடீரென 25க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.குறிப்பாக, சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்திலும் சோதனை நடந்தது. அதேபோல், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் இதேபோன்று சோதனை நடந்தது. இந்த சோதனையில் வெளிநாடுகளுக்கு செல்போன் உதிரிபாகங்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு ெசய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

மேலும், செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் உரிமையை ‘மாஸ்டர்’ சினிமா தாயாரிப்பாளரான சேவிர் பிரிட்டோ நடத்தி வருகிறார். இவர் சினிமா தயாரிப்பு மட்டுமின்றி சென்னை துறைமுகத்தில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிறுவனம் என 15 நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அந்த வகையில் செல்போன் உதிரிபாகம் தயாரிக்கும் நிறுவனங்களில் நடத்திய சோதனையில் சேவியர் பிரிட்டோ நிறுவனத்தின் மூலம் அதிகளவில் பொருட்கள் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.அதைதொடர்ந்து சென்னை அடையாறு மத்திய கைலாஷ் 3வது தெருவில் உள்ள நடிகர் விஜய்யின் உறவினரும் ‘மாஸ்டர்’ திரைப்பட தயாரிப்பாளரான சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் அவரது ஏற்றுமதி நிறுவனங்களிலும் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் நள்ளிரவு வரை சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் சீன  நிறுவனமான ஷியோனி நிறுவனத்தின் செல்போன் உதிரிபாகங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ததில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. அதேநேரம் வருமான வரித்துறையில் கடந்த ஆண்டு கணக்கு காட்டிய ஆவணங்கள் மற்றும் சேவியர் பிரிட்டோ வீடு மற்றும் அலுவலகத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை வைத்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஒப்பிட்டு கணக்காய்வு செய்து வருகின்றனர். இந்த கணக்காய்வுக்கு பிறகு தான் எத்தனை கோடி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்யப்பட்டது என்று தெரியவரும் என வருமான வரித்துறை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.



Tags : Xavier Brito , Following the raid on the cellphone spare factory Filmmaker Xavier Brito home search: Information seized from important documents
× RELATED திரைப்படத் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனை