×

14 வகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்-முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பாராட்டு

திருவில்லிபுத்தூர்/ சிவகாசி :திருவில்லிபுத்தூர் பகுதியில் 14 வகையான மளிகை பொருட்களுக்கான டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.கொரோனா ஊரடங்கை முன்னிட்டு, தமிழக அரசு ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு 14 வகையான மளிகை பொருட்கள் வழங்க உத்தரவிட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் மளிகைபொருட்கள் பெற வீடுகளுக்கு நேரில் சென்று ஜூன் 1 முதல் 3ம் தேதிக்குள் டோக்கன் வழங்க வேண்டும் என அறிவித்துள்ளது. இதனடிப்படையில் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் நேற்று முதல் டோக்கன் வழங்கும் பணி துவங்கியது.டோக்கன் வழங்கும் பணியை திருவில்லிபுத்தூர் தாசில்தார் சரவணன், வட்ட வழங்கல் அதிகாரி கோதண்ட ராமன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி கோதண்டராமன் கூறுகையில், ‘‘திருவில்லிபுத்தூரை பொறுத்தவரை 76 ரேஷன் கடைகள் உள்ளன. 51 ஆயிரத்து 984 அரிசி அரசி கார்டுதாரர்கள் உள்ளனர். கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் ேடாக்கனில் மளிகைப்பொருட்கள் வாங்க வேண்டிய நேரம், தேதி ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இன்றுடன் (ஜூன் 3) இந்த பணி நிறைவடைந்து விடும்’’ என்றார்.அதேபோல், சிவகாசி தாலுகாவில் ஊராட்சி மன்ற தலைவர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று டோக்கன் வழங்கப்பட்டது. சிவகாசி தாலுகாவில் உள்ள 143 ரேஷன் கடைகளில்  ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 குடும்பங்கள் இதன் மூலம் பயன் அடைய உள்ளனர்.  தினமும் 200 ரேஷன் கார்டுகளுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு டோக்கன் முறையாக விநியோகம் செய்யப்பட்டது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில், மக்களின் நலன் கருதி கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் தவணையாக ரூ.2000 வழங்கப்படவுள்ளது. இதுபோன்ற இக்கட்டான நிலையில் மக்களை காக்கும் அரசாக திமுக அரசு உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம், என்றனர்….

The post 14 வகை பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்-முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட மக்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Virudnagar District ,TiruVilliputture ,Sivakasi ,Thiruvilliputtur ,Corona ,Tamil Nadu ,
× RELATED முன்னாள் முதல்வர் ஜெ. பிறந்தநாள் விழா...