×

தமிழகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்ய 500 `கலைஞர் உணவகம்’ திறக்கப்படும்: அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் விளிம்பு நிலையில் உள்ளவர்களுக்கு உணவு பாதுகாப்பினை உறுதி  செய்திடும்  வகையில்  `கலைஞர் உணவகம்’ என்ற பெயரில் 500 சமூக உணவகங்களை  திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார். டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில்  நேற்று இந்தியா முழுவதும் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோக துறை மற்றும் கைத்தறி துறை அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி கலந்து கொண்டு பேசியதாவது.

தமிழ்நாடு அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடின்றி உணவு பாதுகாப்பினை உறுதி செய்திட கடந்த 40 ஆண்டுகளாக அனைவருக்குமான பொது விநியோக திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னதான திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தினந்தோறும் உத்தேசமாக ரூ.16.50 லட்சம் செலவில் 66,000 பக்தர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு முழு உணவு இத்திட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்றது.

இதுமட்டுமில்லாமல், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின்  தலைமையிலான அரசு பொறுப்பேற்றவுடன் ரூ.978 கோடி செலவில் 2.09 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக 14 வகையான மளிகை பொருட்களும் ரூ.4000 ரொக்க தொகையும் வழங்கப்பட்டன. வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூ.1161 கோடி மதிப்பீட்டில் 2.15 கோடி அட்டைதாரர்களுக்கு 20 வகையான உணவு பொருட்கள் வழங்கப்படவுள்ளன. தமிழ்நாடு அரசு 650 சமூக உணவகங்களை தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் வாயிலாக பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 407 உணவகங்களும், 14 மாநகராட்சிகளில் 105 உணவகங்களும், நகராட்சிகளில் 138 உணவகங்களும், கிராம பஞ்சாயத்துகளில் 4 உணவகங்களும் செயல்படுகின்றன. ஒவ்வொரு உணவகம் மூலமாகவும் சராசரியாக நாளொன்றுக்கு 200 முதல் 400 பேருக்கு முழு உணவு அதிக மானியம் கொடுத்து குறைந்த விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த உணவகங்களில் மிகவும் குறைந்த விலையில் ஒரு இட்லி 1 ரூபாய்க்கும், பொங்கல் 5 ரூபாய்க்கும், பல்வகை சாதங்கள் (சாம்பார், கருவேப்பிலை மற்றும் எலுமிச்சை சாதம் ) 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு பகலிலும், 2 சப்பாத்தி பருப்புடன் 3 ரூபாய்க்கு மாலையிலும் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் சராசரியாக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் ரூ.25 முதல் ரூ.30 வரை அரசு செலவு செய்கிறது. தற்பொழுது, இத்திட்டம் மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் நிதி உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.300  கோடி செலவு செய்யப்படுகிறது. விளிம்பு நிலையில் உள்ள வறியவர்களுக்கு உணவு பாதுகாப்பினை சமூக  உணவகங்கள்  மூலமாக உறுதி  செய்திடும்  வகையில்  இதற்கு முந்தைய கூட்டத்தில் குறிப்பிட்டவாறு “கலைஞர் உணவகம்” என்ற பெயரில் மேலும் 500 சமூக உணவகங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும்.

சமுதாய உணவு கூடங்கள் அமைப்பதற்காக  தேவைப்படும் நிலம், மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் வழங்கப்படலாம்,  கட்டிடம், தளவாட சாமான்கள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட மூலதனச் செலவினங்களும் உணவு தானியங்கள் கொள்முதல் பணியாளர் சம்பளம் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தொடர் செலவினங்களுக்கும் முழுமையாக நூறு சதவிகித தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உணவு மற்றும் கூட்டுறவு துறை செயலாளர் முஹமது நசிமுதீன் மற்றும் தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்பொருள்  வழங்கல் துறை ஆணையர் ராஜாராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Tags : Artist Restaurant ,Tamil Nadu ,Minister ,Chakrabarty , 500 'Artist Restaurant' to be opened to ensure food security for marginalized people in Tamil Nadu: Minister Chakrabarty
× RELATED கோடை விடுமுறைக்கு பின்...