×

கலைஞரின் நீங்கா நிழல் சண்முகநாதனின் உடல் தகனம்!: கண்ணீர் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனின் உடல் மயிலாப்பூர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதன் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 80. சென்னை தேனாம்பேட்டை இல்லத்தில் சண்முகநாதனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை அங்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 1 மணி நேரம் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். திமுக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி பிரமுகர்கள், தொண்டர்கள், தோழமை கட்சியினர், பிற அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் நேற்றும், இன்றும் சண்முகநாதனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இன்று மீண்டும் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் சண்முகநாதனின் வீட்டுக்கு சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். நண்பகலில் தேனாம்பேட்டையில் இருந்து மயிலாப்பூர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்ட சண்முகநாதனின் உடல் இறுதி சடங்குகளை தொடர்ந்து தகனம் செய்யப்பட்டது. மின் மயானத்துக்கு நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சண்முகநாதனுக்கு இறுதி மரியாதை செலுத்தினார்.

மறைந்த முதலமைச்சர் கலைஞரின் உதவியாளராக 48 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் சண்முகநாதன். காவல் துறையில் சுருக்கெழுத்தாளராக பணியாற்றிய அவர், 1969ம் ஆண்டு முதல் கலைஞரின் நிழலாகவே அவரது மறைவு வரை நீடித்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த சண்முகநாதன், அண்மையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று உயிரிழந்தார்.


Tags : Ninga Shadow Sammukanadan ,Chief Minister ,Md. KKA Stalin , Shanmuganathan, body, cremation
× RELATED விழுப்புரம் புதிய பஸ்நிலையத்தில்...